பக்கம் எண் :

62நாமக்கல் கவிஞர்

  
  இச்சைபோல் இருந்து வாழ
     ஈப்புழு எறும்பும் கோரும்
உச்சமாம் மனித ஜென்மம்
     சுதந்தர உணர்ச்சி யின்றி
நச்செனும் அடிமை வாழ்வை
     நயந்திட ஞாய முண்டோ?
நிச்சய சபதம் பூண்டு
     சுதந்தரம் நிலைக்கச் செய்வோம்.
 
 
  உலகினுக் கறிவு தந்து
     உண்மைகள் மிகுந்து ஞானக்
கலைகளைக் கணித்துஜீவக்
     கருணைசேர் நமது நாடு
பலபலக் கொடுமை முற்றிப்
     பதைத்திடும் பிறநாட் டார்க்கு
நலமெடுத் துரைக்க வேனும்
     சுதந்தரம் நமக்கு வேண்டும்.
 
 
சுதந்தரம் யாது?
 
அச்சம் விட்டது சுதந்தரம்
     அன்பு விடாதது சுதந்தரம்
இச்சைப் படிசெயல் சுதந்தரம்
     இடர்செய் யாதது சுதந்தரம்
பிச்சை கொள்ள விரும்பாது
     பிறருக் கீய வருந்தாது
கொச்சை மொழிகளைச் சொல்லாது
     கோணல் வழிகளிற் செல்லாது.