பக்கம் எண் :

70நாமக்கல் கவிஞர்

  
  சுதந்தரம் இல்லா ஒரு நாடு
சூழ்புலி பேய் மிகும் பெருங்காடு
எதிர்ந்திடும் துயர்களைச் சகித்திடுவோம்
எம்முடைச் சுதந்தரம் வகித்திடுவோம்.
(சுத)
 
பொது ஜனநாயக முறைகாணும்
பூரண சுதந்தரம் பெறவேணும்
எதுதடை நேரினும் அஞ்சாமல்
எவரையும் அதற்கினிக் கெஞ்சாமல்.
 
(சுத)
 
சுதந்தரச் சபதம்
 
  அவரவர் உழைப்பின் பலன்களை முழுதும்
     அவரவர் உரிமையால் அடைந்து
சுவையுள வாழ்க்கைக் கவசிய மான
     பொருளெலாம் சுலபமாய்க் கிடைத்துப்
புவியினில் எல்லா வசதியும் பெற்றுப்
     பூரண வளர்ச்சியில் பொலிதல்
எவரொரு பேர்க்கும் மறுக்கொணா உரிமை
     இந்தியர் எமக்குமாம் இதுவே.
 
 
இயற்கையா மிந்த உரிமையைப் பறிக்க
     இடையிலே தடையென நின்று
செயற்கையா லடக்கிக் கொடுமைகள் புரியும்
     தீமைசேர் அரசியல் என்பதையும்
முயற்சியால் திருத்த முடியாது போனால்
     முற்றிலும் அதனையே நீக்கி
அயர்ச்சியில் லாத வேறொரு அரசை
     அமைப்பதும் குடிகளின் உரிமை.