பக்கம் எண் :

72நாமக்கல் கவிஞர்

  
  பத்திய மாக அதன்படி நடந்து
     பணிசெய்வோம் என்றுநாம் இன்று
சத்தியம் செய்து சபதமும் கொள்வோம்
     சந்ததம் இந்தியா வாழ்க.
 
 
சாந்த வாழ்விற்கும் சாத்விகப் போர்க்கும்
     ஜனங்களைத் தகுதியாக் கிடவும்
கூர்ந்து நாம் கொண்ட நிர்மாணத் திட்டம்
     குறைவற நாட்டினிற் பரவி
சார்ந்தநற் கதரும் சாதிகள் சமயச்
     சமரச சல்லாப வாழ்வும்
தேர்ந்தநற் சேவை தீண்டாமை ஒழித்தல்
     சிறப்புறச் செய்திடல் வேண்டும்
 
 
எட்டிய மட்டும் ஜனங்களுக் குள்ளே
     சமரச எண்ணமே பரப்பி
முட்டிடும் சாதிச் சண்டைகள் நீக்கி
     முரண்பாடு வேற்றுமை மாற்றி
பட்டினிப் பஞ்சம் படிப்பிலாத் தன்மை
     பற்பல கொடுமையால் நொந்து
ஒட்டுதல் மறுத்து ஒதுக்கின பேரை
     உயர்த்திடப் பலவிதம் உழைப்போம்.
 
 
ஆங்கிலர் நடத்தும் ஆதிக்க மதனை
     அழித்திட அமைத்துளோம் எனினும்
நாங்களோர் நாளும் இங்கிலீஷ் காரர்
     நாசத்தை விரும்பிட மாட்டோம்
ஈங்குள அவர்கள் எத்தொழில் செயினும்
     இன்பமாய் வாழ்ந்திட இசைவோம்
தாங்களே எஜமான் என்றிடும் தருக்கைத்
     தடுப்பதே நாம் கொண்ட வேலை.