பக்கம் எண் :

80நாமக்கல் கவிஞர்

  

சத்திய விரதம்
 
  சத்திய விரதம் சாதிப்போம்
     சமரச வாழ்க்கை போதிப்போம்
உத்தம சேவை இதுவாகும்
     உலகத் துக்கே பொதுவாகும்.
 
 
அன்பின் பெருமையை எடுத்துரைப்போம்
     ஆயுதக் கொடுமையைத் தடுத்துரைப்போம்
துன்பம் யாவையும் சகித்திடுவோம்
     தூய நன் நடத்தைகள் வகித்திடுவோம்
 
 
  பொய்யும் இம்சையும் வஞ்சனையும்
     பூதலம் எங்கும் மிஞ்சினதால்
மெய்யும் கருணையும் தழைத்திடவே
     வேண்டிய விதங்களில் உழைத்திடுவோம்
 
 
வீரம் என்பது கொலையன்று
     வெற்றியும் அதனால் நிலையன்று
தீரம் என்பது திடசாந்தம்
     தெரிவிப்பது நம் சித்தாந்தம்
 
 
ஜாதியும் மதங்களும் வீட்டோடு
     சமத்துவம் யாவரும் நாட்டோடு
நீதியும் அறங்களும் உலகெங்கும்
     நிலைத்திடத் தவம்புரி கிறசங்கம்
 
 
சாந்தியைப் படித்தது நம்நாடு
     சத்தியம் கொடுத்தது நம்நாடு
காந்தியைத் தருவது நம்தேசம்
     கடமை நமதே உபதேசம்.