பக்கம் எண் :

82நாமக்கல் கவிஞர்

  
  நாளுக்கு நாள் வந்து நள்ளிருள் தன்னில்
     நரிபோலும் குறிதேடும் கள்ளர்கள் என்ன
பாலுக்கு வாய்வைக்கும் பாலரைக் கொல்வார்!
     பாவத்தை நாகரி கம்மெனச் சொல்வார்!
 
 
  எந்திர வித்தைகள் வேணது கற்றோம்!
     என்னென்ன மோபல புதுமைகள் பெற்றோம்!
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
     சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில்லா பல சக்திகள் உற்றும்
     அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்றும் படித்திலம் ஐயோ!
     தரணியில் மக்கள் தவிப்பது பொய்யோ
 
 
இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து;
     இந்திய ஞானிகள் கண்ட மருந்து;
உத்தமர் யாரும் உவக்கும் மருந்து,
     உலகத்தில் துன்பம் ஒழிக்கும் மருந்து,
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கை
     சமனிடை அன்பெனும் தேனில் குழைத்து
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
     பாருக்குள் பேருக்கும் போரிலை கண்டாய்.
 

சத்தியச் சங்கு
 
 
சத்தியம் நிலைக்குமென்று சங்கூதுவோம்
     சாந்தமே ஜெயிக்குமென்று சங்கூதுவோம்
நித்தியம் கடவுளென்று சங்கூதுவோம்
     நீர்க்குமிழாம் வாழ்க்கையென்று சங்கூதுவோம்.