| நீதியே நிலைக்கு மென்று சங்கூதுவோம் ஞாயமே கெலிக்குமென்று சங்கூதுவோம் வாதுசூது பொய்மையாவும் ஒன்றோடொன்றாய் வம்புகொண்டு மறையுமென்று சங்கூதுவோம். | |
| புண்ணியம் பலிக்குமென்று சங்கூதுவோம் பொறுமையே கெலிக்குமென்று சங்கூதுவோம் மண்ணிற் செய்த நன்மை தீமை யல்லாமலே மற்றதொற்றும் மிச்சமில்லை என்றூதுவோம். | |
| தருமமே நிலைக்குமென்று சங்கூதுவோம் தானமே தழைக்குமென்று சங்கூதுவோம் கருமமே சிறக்குமென்று சங்கூதுவோம் கடவுளுண்மை வடிவமென்று சங்கூதுவோம். | |
| உண்மையைக் கடைப்பிடித் துயர்ந்தார்களை உலகமோசம் என்னசெய்யும்? என்றூதுவோம் தண்மையான சாந்திபெற்ற தக்கோர்முன்னே சஞ்சலங்கள் ஓடுமென்று சங்கூதுவோம். | |
| கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர்முன்னால் கூர்மழுங்கும் ஆயுதங்கள் என்றூதுவோம் பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப் பயமுறுத்த ஒன்றுமில்லை என்றூதுவோம். | |
| அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை அரசனும் வணங்குமென்று சங்கூதுவோம் வம்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாமிதோ வழிகொடுத்து விலகு மென்று சங்கூதுவோம். | |
| கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர் குவலயத்தில் வாழுமென்று சங்கூதுவோம்! வெல்லுகின்ற போதுமா சைவிட்டார்களே வீரர்தீரர் சூரரென்று சங்கூதுவோம். | |