பக்கம் எண் :

84நாமக்கல் கவிஞர்

  
  ஆன்மசக்தி கண்டுகொண்ட அன்பாளரை
     அடிமையாக்க யாருமில்லை என்றூதுவோம்
தான்மறந் தகந்தைவிட்ட தக்காரையே
     தலைவணங்கும் உலகமென்று சங்கூதுவோம்.
 
 
சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்
     சாத்திரங்கள் முடிவிதென்று சங்கூதுவோம்
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
     கால்நடக்கும் வேதமென்று சங்கூதுவோம்.
 

காந்தீயமும் தமிழனும்
 
  பரதேசி என்று வந்தோர் யாரானாலும்
     பரிவோடு உபசரித்துப் பங்கும் தந்த
ஒருதேசம் உலகத்தில் இருக்குமானால்
     உண்மை, அது தமிழ்நாடு ஒன்றேயாகும்.
வருதேச காலத்தின் வர்த்த மானம்
     வகையேறு காட்டுகின்ற வருத்த மொன்றும்
கருதாமல் நமது குணம் கலைந்திடாமல்
     கருணையொன்றே பின்பற்றிக் கடமை செய்வோம்.
 
 
தமிழ்நாட்டின் சரித்திரத்தை மனத்தில் வைத்து
     தாராளத் தமிழர்களின் தன்மை காத்து
அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கியுள்ள
     அகிலத்தின் நல்லறிவு அனைத்துங் கண்டு
நமதாகும் மிகச்சிறந்த நாக ரீகம்
     நானிலத்துக் கிப்போது நன்மை காட்ட
எமதாகும் மிகப்பெரிய கடமையென்று
     எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ணவேண்டும்.