பக்கம் எண் :

தமிழன் இதயம்9

  
  கொல்லா விரதம் பொய்யாமை
     கூடிய அறமே மெய்யாகும்
எல்லாப் புகழும் இவைநல்கும்
     என்றே தமிழன் புவி சொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்
     மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
      ‘தருவது மேல்’ எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
     சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
     நிறைகுறை யாமல் பண்ணினவன்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
     உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்
     சாந்தம் தவறா துடனிருந்தான்.

யாராலே?
 
  சூரியன் வருவது யாராலே?
     சந்திரன் திரிவது எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
     கண்ணிற்படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
     பெருமழை பெய்வது எவராலே?
ஆரிதற் கெல்லாம் அதிகாரி?
     அதைநாம் எண்ணிட வேண்டாவோ!