பக்கம் எண் :

92நாமக்கல் கவிஞர்

  
  கன்று நலிந்திடப் பாலெல்லாம்
     கறந்து புசித்தவன் சண்டாளன்
ஒன்றுந் தெரியேன்  ‘ஏழை’ என்றிடும்
     ஒன்றே என்குறை அதற்காக
(நானோ)
 
கள்ளைக் குடிப்பவன் சண்டாளன்
     காமத் தலைபவன் சண்டாளன்
கொள்ளை அடிப்பவன் சண்டாளன்
     கூடிக்கெடுப்பவன் சண்டாளன்
 ‘அள்ளித் தெளிக்கா’ப் பணக்காரன்
     ஆபத் துதவான் சண்டாளன்
வெள்ளைத் துணியொன் றில்லாமல்
     வேலை செய்வேன் அதற்காக
(நானோ)
 
தெய்வ மிகழ்ந்தவன் சண்டாளன்
     தீனரைக் கெடுத்தவன் சண்டாளன்
பொய்யுரை பேசிப் பிறர்கேடே
     புரிந்து பிழைப்பவன் சண்டாளன்
 ‘ஐய அடைக்கலம்’ என்றோரை
     ஆதரிக் காதவன் சண்டாளன்
வெயில் மழை யென்றில்லாமல்
     வேண்டிய செய்வேன் அதற்காக
(நானோ)
 
ஆலயத் துள்ளே அபசாரம்
அறிந்தே புரிந்தவன் சண்டாளன்
கூலியை மறைத்தவன் சண்டாளன்
கோள்சொல்லிப் பிழைப்பவன் சண்டாளன்
வேலியைக் கடந்தே பிறன்பயிரை
வேண்டுமென் றழித்தவன் சண்டாளன்
காலையும் மாலையும் இல்லாமல்
கஷ்டப் படுவேன் கள்ளமிலேன்

(நானோ)