பக்கம் எண் :

106சாமி சிதம்பரனார்

New Page 1

வெளி வேடத்தால் பயன் இல்லை; பிறர் வசை கூறினாலும்
பொறுத்துக்கொள்ளும் பொறுமைக் குணம் வேண்டும். துறவற நெறியைப்
பின்பற்றி நடக்க முடியாதவர்கள் துறவறம் பூணுவதை விட இல்லறத்தில்
வாழ்வதே ஏற்றதாகும்.

சிறுபஞ்ச மூலச் சிறப்பு

நான்கு வரிகள் கொண்ட பாடலிலே ஐந்து பொருள்களை அமைத்துப்
பாடுவதற்கு ஆற்றலும் புலமையும் வேண்டும். இவ்வகையில் நூறு
பாடல்களைப் பாடிய இவ்வாசிரியர் திறம் போற்றத்தக்கது. இவ்வாசிரியர்
பெருமையையும், இந்நூலின் சிறப்பையும் பாராட்டிக் கூறும் பாயிரச் செய்யுள்
ஒன்று இந்நூலின் இறுதியிலே அமைந்திருக்கின்றது.
 

  ‘‘மல்இவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால்-கல்லா
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி ஆசான்
சிறுபஞ்ச மூலம் செய்தான்.
 

வலிமை நிறைந்த தோள்களையுடைய மாக்காயன் என்பவருடைய
மாணாக்கன்; இம்மாநிலத்திலே உள்ள மக்கள் பலருடைய அறியாமையாகிய
நோயை நீக்கும் தன்மையுடையவன்; பஞ்சத்தை நீக்கும் மழையைப்போலக்
கைம்மாறு கருதாது உதவி செய்யும் குணமுள்ளவன்; மாக்காரியாசான்
என்னும் பெயருள்ளவன்; பலநூல்களைக் கற்காத மக்கள் மனத்திலே உள்ள
குற்றங்கள் நீங்கும்படி, சிறு பஞ்சமூலம் என்னும் இந்நூலைச் செய்தான்’’.

இதுவே இந்நூலின் சிறப்பை உணர்த்துவதற்குப் போதுமானதாகும்.
பழந்தமிழ் மக்களின் சமுதாய நிலையை அறிவதற்கு இந்நூல்
பெருந்துணையாக நிற்கின்றது.