பக்கம் எண் :

118சாமி சிதம்பரனார்

New Page 1

எவ்வெவ்விதம் மரியாதை காட்டுவது? யார் யாருக்கு உதவி செய்ய
வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
படுக்கையிலிருந்து எழும்போது என்ன செய்யவேண்டும்?
படுக்கப்போகும்போது தான் என்ன செய்யவேண்டும்? என்பவைகளை
யெல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது இந்நூலிலே.

இதைப் படிக்கும்போது நமக்கு வியப்புண்டாகும். ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த மக்கள் பின்பற்றிய ஒழுக்கம், இன்றைய
விஞ்ஞான முறையோடு ஒத்திருப்பதைக் கண்டால் யார்தான்
வியக்கமாட்டார்கள்?

‘‘விடியற்காலமாகிய நாலாம் சாமத்திலேயே தூக்கத்திலிருந்து விழித்தெழ
வேண்டும்; அதாவது கதிரவன் புறப்படுவதற்கு முன்பே கண்விழிக்க
வேண்டும். அன்றைக்குத் தான் செய்யவேண்டிய நல்லறங்களைப்பற்றியும்
பொருள் தேடும் முயற்சிக்கான வேலையைப் பற்றியும் சிந்தித்து
முடிவுசெய்துகொள்ள வேண்டும்; அதாவது இன்றைக்கு இன்னின்ன
காரியங்களைச் செய்வது என்று திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். பிறகு
தந்தை தாயரை வணங்கித் தன் காரியங்களைப் பார்க்கத்
தொடங்கவேண்டும்’’ (பா.4)

இவ்வாறு படுக்கையை விட்டு எழுந்தபின் செய்ய வேண்டியவைகளைப்
பற்றி கூறுகிறது.

‘‘படுக்கும்பொழுது தம் வழிபடு தெய்வத்தைக் கைகூப்பி வணங்கவேண்டும்; வட திசையிலோ, மூலைகளிலோ தலைவைத்துப்
படுக்கக்கூடாது;போர்வையால் போர்த்திக் கொண்டு படுக்கவேண்டும்’’(பா.30)

இவ்வாறு படுக்கவேண்டிய முறையைப் பற்றிக் கூறுகின்றது. இன்றும்
பலர் இம்முறையைப் பின்பற்றி வருகின்றனர்.