பக்கம் எண் :

120சாமி சிதம்பரனார்

New Page 1

தலையின் அழுக்கும் எண்ணெயுடன் கலந்து உடம்பிலே படியும். பிறர்
உடுத்த அழுக்காடையைத் தொடுவதால் அவர் நோய் நம்மையும் பற்றும்.
பிறர் செருப்பை மிதித்தால், அவர் காலிலிருந்து அச்செருப்பிலே
படிந்திருக்கும் அழுக்கு நமது காலிலும் படியும். இது நோய்க்கு இடமாகும்.
இக்கருத்துடன்தான் இம்மூன்று செயல்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன.

நீராடும்போது என்னென்ன காரியங்களைச் செய்யக்கூடாது என்று
கட்டளையிடுகிறது ஒரு செய்யுள்.
 

  ‘‘நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார், உமியார், திளையார், விளையாடார்,
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவி னவர்.
 

ஒழுக்க நெறியிலே நின்றவர்கள் தினந்தோறும் குளிக்கும்போது,
தண்ணீரிலே நீந்த மாட்டார்கள்; நீரை வாயில் கொப்பளித்து உமிழ
மாட்டார்கள்; நீரைக் கலக்க மாட்டார்கள்; நீரிலே விளையாட மாட்டார்கள்;
உடம்புக்குக் காய்ச்சலாயிருந்தாலும் தலை முழுகாமல் உடம்பு மட்டும்
குளிக்கமாட்டார்கள்’’.

(பா.14)

இச்செய்யுள் நகர மக்களுக்குத் தேவையில்லை. பெரும்பாலும் குளத்தில்
குளிக்கும் கிராம மக்கள் பின்பற்ற வேண்டிய செய்யுளாகும். குளிப்போர்
குளிக்கும் நீர் நிலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி
என்பதே இச்செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘‘காய்ந்தது எனினும்
தலைஒழிந்து ஆடாரே’’ என்பது மருத்துவ நூலார்க்கு மாறுபட்டதாகும்.
தலையை நனைத்துக் கொள்ளாமல் உடம்பு மட்டும் குளிக்கலாம் என்பது
மருத்துவர் முடிபு. இதைக் ‘‘கண்ட ஸ்நானம்’’ என்பர்.