பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்121

New Page 1
தம் அழகு கெடாமல் இருக்க வேண்டுவோர் என்ன செய்யவேண்டும்
என்று ஒரு செய்யுள் குறிப்பிடுகின்றது.
 
  ‘‘மின்ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்
தம்ஒளி வேண்டுவோர் நோக்கார்; பகல் கிழவோன்
முன்ஒளியும் பின்ஒளியும் அற்று.
 

மின்னல் ஒளியைப் பார்க்கக்கூடாது; எரிந்து விழுகின்ற நட்சத்திரத்தைப்
பார்க்கக் கூடாது; விலைமாதர்களின் அழகிலே ஈடுபட்டு விடக்கூடாது;
இவைகளைப் போலவே காலைக் கதிரவன் ஒளியையும், மாலைக் கதிரவன்
ஒளியையும் காணக்கூடாது. தம் உடல் வனப்பு கெடாமலிருக்க விரும்புவோர்
இவ்வாறு செய்வார்கள்’’.

(பா.51)

இன்றும் பல மக்கள் இச்செய்யுளில் கூறியிருப்பதை நம்புகின்றனர்.
மின்னலைப் பார்த்தால் கண் பார்வை குன்றும்; எரிந்து விழும்
நட்சத்திரத்தைப் பார்த்தால் மறதி உண்டாகும்; வேசையர்களின் கோலத்தை
உற்று நோக்கினால் மனம் அவர்கள்பால் செல்லும்; காலைக் கதிரையோ
மாலைக் கதிரையோ கண்களால் உற்று நோக்கினால் கண்ணொளி குறையும்.
இவ்வாறு நம்புகின்றனர். ஆகவே இச்செய்யுளில் கூறுவன இன்னும்
வழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆசாரத்தைப் பின்பற்றுவோர் யார்?

சோம்பேறிகள் ஆசாரம் உள்ளவர்களாயிருக்க முடியாது. அவர்கள்
எக்காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே துன்ப
வாழ்க்கையாகத்தான் இருக்கும். முயற்சியுள்ளவர்களே எல்லாவற்றிலும்
வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையிலும் இன்பம் பெறுவார்கள். ஆதலால்
ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணரவேண்டும். அக்கடமையைத்
தவறாமல் ஊக்கத்துடன் செய்யவேண்டும். இவர்களிடந்தான் ஆசாரம்
நிலைத்து நிற்கும். இச்செய்தியை உதாரணத்துடன் உரைக்கின்றது ஒரு
வெண்பா.