பக்கம் எண் :

126சாமி சிதம்பரனார்

New Page 1

பழமொழியாகத் தொகுத்தனர். இவ்வரலாற்றை நாலடியாரைப் பற்றிக் கூறும்
இடத்திலே காணலாம். சிறப்பிலே நாலடியாருக்கு அடுத்தபடிதான் பழமொழி
என்பதைக் காட்டுவதற்கே இக்கதை வழங்குகின்றது.

பழமொழிப் பாடல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்ட பாடல்கள்
போலவே காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பெயரும் முன்றுறையர் என்று
குறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பழமொழி நூலைப்பற்றி வழங்கும் அக்கதை
புனைந்துரையே ஆகும்.

இந்நூலின் வெண்பாக்கள் கொஞ்சம் கடினமானவை; பல
வெண்பாக்களுக்கு எளிதிலே பொருள் தெரிந்துகொள்ள முடியாது.
முயன்றுதான் பொருள் கண்டுபிடிக்கவேண்டும். நாலடியார் வெண்பாக்களைப்
போல நயமுள்ளவை அல்ல. ஆகையால்தான் இந்நூல் நாலடியாரைப்போல
அவ்வளவு பெருமையடையவில்லை.

திருக்குறளில் கூறப்படுவது போலவே சிறந்த பல அறங்கள் இந்நூலிலும்
கூறப்படுகின்றன. திருக்குறளின் கருத்துக்களும் நிரம்பக் காணப்படுகின்றன.
பல பாடல்களிலே கதைகளும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன.
இராமாயணம், பாரதம் முதலிய கதைக் குறிப்புகளை இந்நூலிலே காணலாம்.
தமிழ் நாட்டு வரலாறுகள் பலவற்றைக் காணலாம்.

கதைகள்

மாபலிச் சக்கரவர்த்தி, அகங்காரத்தால், தன் அரசையிழந்தான்.
‘‘வாமனனுக்கு மூன்றடி மண் கொடுக்காதே; அது உன்னால் முடியாத
காரியம்’’ என்று அவனுடைய குரு தடுத்தும் கேட்கவில்லை; என்னால்
ஆகும் என்று அகங்காரம் கொண்டதால் அழிந்து போனான்.