பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்135

New Page 1
பரந்த அறிவு வளர்ந்துவிடாது. இவ்வாறு ஒரு நூலை மட்டும் எப்பொழுதும்
படித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பல நூல்களையும்
கற்றவர்களிடமிருந்து அரும் பொருள்கள் பலவற்றைக் கேட்பதே
சிறந்ததாகும்.
 
  உணற்குஇனிய இந்நீர் பிறிதுழி இல், என்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்;-கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலில், கேட்டலே நன்று’’.
 

பல நூல்களையும் படிக்கவேண்டும்; பல நூல்களைக்
கற்றவர்களிடமிருந்து பல செய்திகளையும் கேட்டறிந்து கொள்ளவேண்டும்;
அப்பொழுதுதான் அறிவு வளரும்; உலக வாழ்க்கையைப்பற்றி நன்றாக
அறியலாம். இப்படியில்லாமல் ஒன்றைமட்டும் திருப்பித் திருப்பி மனப்பாடம்
பண்ணிக்கொண்டும், துருவித் துருவி ஆராய்ந்து கொண்டும் இருப்பவர்
பரந்த அறிவைப் பெற முடியாது. கிணற்றுத் தவளை போல்தான் இருப்பர்.

தமிழிலே உள்ள பல நூல்களை மட்டும் படிப்பது போதாது
வேறுமொழிகளில் உள்ள சிறந்த பல நூல்களையும் படித்தறிய வேண்டும்.
இதுவே சிந்தனா சக்தி சிறப்படைவதற்கு வழி செய்வதாகும். அறிவுச்
செல்வத்தை ஈட்டுவதற்கு அருந்துணை புரிவதாகும். இக்கருத்தும்இப்பழமொழி வெண்பாவில் அமைந்திருக்கின்றது.

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல் என்றொரு பழமொழி
உண்டு. குற்றமற்றவர்கள் மேல் அற்பர்கள் பழி பேசும்போது
இப்பழமொழியைச் சொல்லுவார்கள். நல்லவர்கள் மேல் எரிந்து வீழ்ந்து
எந்தப் பழியைச்சுமத்தினாலும், அது அவர்களை ஒன்றும் செய்துவிட
முடியாது. நல்லவர்களை நல்லவர்கள் என்று தான் உலகம்