இச்செய்யுள் தலைவியின்
கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பாக எடுத்துக்
காட்டுகின்றது
‘‘இரவில் வந்து போவது ஆபத்து;
வெளிப்படையாகக் கற்பு
மணம் புரிந்துகொண்டு
வாழ்வதே சிறந்தது’’ என்று குறிப்பிடுகின்றது.
அன்றியும்,
தலைவி தலைவன் மீது
கொண்டுள்ள அன்பையும்
அறிவிக்கின்றது. கற்புள்ள மனைவி தன் காதலனுக்கு
எவ்விதத்
துன்பமும்
உண்டாகக்கூடாது என்பதிலே எவ்வளவு கவலைகொண்டிருப்பாள்
என்பதற்கும் இச்செய்யுள் ஒரு
எடுத்துக்காட்டு.
களவு மணம் தமிழர் பரம்பரை வழக்கம்;
களவு இல்லாமல் கற்பு
நிகழாது; இதுவே
தமிழர் கொள்கை. ஆயினும், நாளடைவில் கற்பு
மணத்தையே
சிறப்பாக மதித்தனர். களவு
மணத்தைப் பழிக்கவும்
தொடங்கினர். ஆதலால் உள்ள நட்புள்ள காதலர்கள்
விரைவில்
கற்பு மணத் தம்பதிகளாகிப் பழிப்பின்றி வாழவே விரும்பினர். இந்த நிலை
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தோன்றிவிட்டது.
இவ்வுண்மையை விளக்கும்
செய்யுட்களை அகத்திணை
நூல்களிலே
காணலாம்.
|