பக்கம் எண் :

16சாமி சிதம்பரனார்

New Page 1

‘‘உனக்கும் தலைவிக்கும் உள்ள கள்ள நட்பு வெளிப்பட்டால் ஊரார்
பழிப்பர். ஆதலால் விரைவில் தலைவியைப் பலரும் அறிய
மணம்புரிந்துகொள்’’ என்ற கருத்தையே தோழி இவ்விதம் தலைவனிடம்
உரைத்தாள்.

கற்புள்ள பெண்ணுக்குக் கணவனே தெய்வம்; அவனை விட்டால்
அவளுக்கு வேறு கதியில்லை; இதுவே பழந்தமிழர் கொள்கை.
இக்கொள்கையை வற்புறுத்துகிறது இந்நூல்.

மனைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலைத் தணிக்கும்படி, காதலன்
தோழியிடம் வேண்டிக்கொள்ளுகின்றான். அப்பொழுது அவனுக்குத் தோழி
விடையளிக்கின்றாள்.அவ்விடையிலே இக்கருத்து அடங்கி யிருக்கின்றது.

‘‘செந்தாமரைகள் பூத்திருக்கின்ற வயல்களையுடைய மருதநிலத்
தலைவனே! நாங்கள் உன்மேல் வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்?
என்னுடைய தலைவிக்கு நல்ல அழகைத் தந்தவனும் நீதான்! அந்த அழகைத்
திருப்பி எடுத்துக்கொண்டவனும் நீயேதான்! ஆதலால்
எங்களால் ஆவது ஒன்றும் இல்லை; உன் விருப்பத்தின்படியே செய்.

செந்தாமரை மலரும் செவ்வயல் நல்ஊர,
நொந்தால் மற்றுஉன்னைச் செயப்படுவதுஎன் உண்டாம்
தந்தாயும் நீயே! தரவல்ல நல்நலம்
கொண்டாயும் நீ! ஆயக் கால்’’                               (பா.36)

 
 

இவ்வாறு காதலன் காதலிகளின் அன்பு நிறைந்த வாழ்க்கை முறையை
எடுத்துக்காட்டுவதே இந்நூலாகும். ஆணும் பெண்ணும் இணைந்து
ஒன்றுபட்ட உள்ளமுடன் வாழும் நிலை ஏற்பட்ட பிறகுதான்
மக்களிடையிலே நாகரிகம் தழைத்தது. அறம், பொருள், வீடு பற்றிய
எண்ணங்கள் எல்லாம் தோன்றி வளர்ந்தன. இவ்வெண்ணங்கள் தோன்றி
வளர்வதற்கு அடிப்படை ஆண் பெண்களின் அன்பிலே தோன்றிய குடும்ப
வாழ்வுதான்