பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்17

New Page 1

தெய்வ வணக்கம்

‘‘தேவர்கள் வானுலகிலே வாழ்கின்றவர்கள். அவர்கள் எல்லா
வல்லமையும் படைத்தவர்கள்; அவர்களை வணங்கி வழிபாடு செய்தால் நாம்
விரும்புவதைப் பெறலாம்’’ இந்த நம்பிக்கை தமிழர்களிடம்
குடிகொண்டிருந்தது.

தேவர்களைப் பல வகையிலே மக்கள் வணங்கி வந்தனர். அவைகளில்
நறுமணப் புகையிட்டு வணங்கும் வழக்கம் ஒன்று. இதைத்தான் தூபமிட்டு
வணங்குதல் என்று கூறுவர். இன்றும் சாம்பிராணி, தசாங்கம், குங்கிலியம்,
ஊதுவத்தி முதலிய தூபங்களால் தெய்வங்களை வணங்குவதைக்காண்கிறோம்.
இது பழந்தமிழர் பண்பாடுதான்.

புகழ் மிகு சாந்துஎறிந்து, புல்எரி ஊட்டிப்
புகை கொடுக்கப் பெற்ற புலவோர், -துகள்பொழியும்
வான் உயர் வெற்ப இரவின் வரல்வேண்டா
யானை உடைய சுரம்                                       (பா.1)
 

‘‘நீ வரும் வழியிலே யானை உண்டு. ஆதலால் நீ இனி இரவிலே
வரவேண்டாம்’’ என்று தலைவனுக்குக் கூறுகின்றாள் தோழி. அப்பொழுது
அவனுடைய மலையிலே நடைபெறும் தெய்வ வழிபாட்டை
எடுத்துரைக்கின்றாள். ‘‘சந்தனக் கட்டையை வெட்டிக் குவித்து நெருப்பூட்டி
அப்புகையால் தேவர்களை வணங்குகின்றனர். இப்புகையைப் பெற்ற
தேவர்கள், மழையைப் பெய்யச் செய்கின்றனர்’’ என்ற கருத்துள்ளதே
இச்செய்யுள். இதனால் மழை வேண்டித் தெய்வத்தை வணங்கும் வழக்கம்
பண்டைக் காலத்தில் இருந்ததைக் காணலாம்.

நீதிமொழி

அகத்திணை நூல்களிலும் நீதிகளை அமைத்துக் காட்டும் வழக்கம்
உண்டு. நீதிகளை உவமானங்களாக உரைப்பார்கள்.