பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்29

New Page 1

இச்செய்யுளிலே ‘‘உன்னுடன் சேர்ந்து இல்லறத்தை இன்பமுடன்
நடத்துவதற்காகவே பொருளீட்டச் சென்றார். ஆதலால், அவர் அன்பிலே
ஐயங்கொள்ளாதே’’ என்று கூறும் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம்.

பொய்யை வெறுத்தல்

பொய் சொல்வது தவறு. பொய் சொல்வதை நல்லவர்கள்
வெறுப்பார்கள். பொய்யர்களை மக்கள் மதிப்பதில்லை. அவர்களோடு
முகங்கொடுத்துப் பேசவும் முன்வர மாட்டார்கள். இன்றும் பொய்
புகல்வோரைப் பொதுமக்கள் இகழ்ந்துரைப்பதைப் பார்க்கின்றோம்.இது
பண்டைத் தமிழர் பண்பாகும்.

காதலன் பரத்தையர் வீட்டுக்குப் போய்விட்டான். சில நாட்கள் கழித்து
வீட்டிற்குத் திரும்ப நினைத்தான். திடீரென்று திரும்பிவந்து வீட்டுக்குள்
புகுந்தால் காதலியின் வரவேற்பைப் பெறமுடியாது என்பது அவனுக்குத்
தெரியும். ஆதலால் அவன் பாணனை அனுப்பிக் காதலிக்குச் சமாதானம்
கூறும்படி செய்தான். தலைவனால் தூதாக அனுப்பப்பட்டு வந்த பாணன்,
தலைவியை அடைந்து ஏதேதோ பொய்யும் புளுகும் அளந்தான். ‘‘தலைவன்
இனித் தவறு செய்யமாட்டான். அவன் இப்பொழுது செய்த
குற்றத்திற்காக வருந்துகின்றான்; இக்குற்றத்தை மன்னிக்கும்படி
வேண்டுகிறான். இனி வேசையர் வாழும் திக்கைத் திரும்பிப் பார்ப்பதே
இல்லையென்று உறுதி கூறுகின்றான்’’ என்றெல்லாம் சொன்னான் பாணன்.

பாணன் இப்படிச் சொல்வது புதிதன்று. இதற்கு முன் எத்தனையோ
தடவை தலைவன் இவ்வாறு வாக்குறுதி தந்தது உண்டு. இது தலைவிக்குத்
தெரியும். ஆதலால் பாணன் கூறுவது பொய்யுரை என்றே அவள்
நினைத்தாள். நினைத்ததும் அப்பாணனைக் கடிந்து கொள்ளுகின்றாள்.