பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்37

New Page 1

இந் நம்பிக்கையுள்ளவர்கள் இன்றும் இருக்கின்றனர். பண்டைத்
தமிழர்களிடமும் இந்த நம்பிக்கை இருந்தது. இதனை இந்நூலின் நாற்பதாவது
செய்யுளால் அறியலாம்.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மையுண்டு. கனவுக்குப் பலன்
உண்டு. நெஞ்சத்திலே எழும் நினைப்பு காரணமாக, உடம்பின்
உறுப்புக்களிலே மாற்றம் ஏற்படும், பல்லி சொல்வதற்குப் பலன் உண்டு;
இத்தகைய நம்பிக்கைகள் பழந்தமிழர்களிடம் இருந்தன.
 

  ‘‘பூம்கண் இடம்ஆடும்; கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரையாம் நினைப்ப
வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீரப்
பாங்கத்துப் பல்லி படும்.              (பா.41)
 

உயர்ந்த மலையைக் கடந்து சென்ற நம் காதலரைப் பற்றி நாம்
நினைத்த உடனே, அழகிய கண்களிலே இடக்கண் துடிக்கின்றது; கண்ட
கனவுகளும் நல்ல கனவுகளாக இருந்தன; இளைத்துப்போன மெல்லிய
தோள்கள் அழகுடன் பருத்தன; நம் துன்பம் தீரும்படி பக்கத்திலே பல்லியும்
சொல்லும்’’ இதனால் மேலே கூறிய நம்பிக்கைகளைக் காணலாம். இத்தகைய
பல சிறந்த கருத்துக்களையுடையது ஐந்திணை எழுபது என்னும் நூல்.