குறிஞ்சியில் 31 வெண்பா; நெய்தலில் 31 வெண்பா; பாலையில் 30
வெண்பா;
முல்லையில் 31 வெண்பா; மருதத்தில் 30 வெண்பா; திணையும் இந்த வரிசையிலேயே
அமைந்திருக்கின்றது. குறிஞ்சியிலும் நெய்தலிலும்
முல்லையிலும் ஒவ்வொரு வெண்பா
மிகுந்திருக்கின்றது.
இந்நூலாசிரியர்
பெயர் கணிமேதாவியார்.
கணி என்றால்
சோதிடர்;
மேதாவியார்
என்றால் வல்லுநர்; கணிமேதாவியார் என்றால்
சோதிடத்திலே
வல்லுநர் என்று
பொருள்
கொள்ளலாம். இவரைப்பற்றிய வரலாறு வேறு
ஒன்றும் தெரியவில்லை.
இந்நூலின் வெண்பாக்கள் சிறிது கடினமானவைதாம்; எல்லோரும்
படித்து எளிதில்
பொருள் தெரிந்து
கொள்ளமுடியாது; எல்லா
வெண்பாக்களிலும் மோனையும் எதுகையும்
அழகாக அமைந்திருக்கின்றன.
ஆயினும்
அவ்வளவு இனிமையான நடையென்று நவில
முடியாது.
பல பாடல்களுக்கு நேராகப் பொருள் கூறலாம்; சில பாடல்களுக்கு
நேராகப் பொருள்
சொல்ல
முடியாது. பதங்களை மாற்றியமைத்துப் பொருள்
சொன்னால்தான் தெளிவாக
விளங்கும். பழந்தமிழ்ச் சொற்கள் பல இந்நூல்
பாடல்களிலே பயின்று வருகின்றன.
இப்பாடல்களிலே குறிப்பிடப்படும் சில
மலர்கள், மரங்களைப்பற்றி இன்று அடையாளம்
காண
முடியாது. போதுமான
தமிழ்ப் பயிற்சியில்லாதவர் இந்நூலைப் படிக்கும்போது சிறிது
பொறுமையும்,
முயற்சியும்
காட்டித்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு திணையைப்பற்றிய பாடல்களும், அந்தந்த நிலத்தில் உள்ள
இயற்கைக்
காட்சிகளைப் படம் பிடித்தது போல எடுத்துக்காட்டும். இயற்கை
நிகழ்ச்சிகளை
எடுத்துரைப்பதிலே இந்நூலாசிரியர் மிகவும் வல்லுநர். தமிழர்
பண்பாட்டையும் பழக்க
வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலாசிரியர்
குறிப்பிட்டுள்ளார்.
|