பக்கம் எண் :

4சாமி சிதம்பரனார்

New Page 1

பொய்கையார் என்ற பெயர் படைத்தவர் பலர் உண்டு. ஆகையால்
சங்ககாலத்துப் புலவர்களின் பெயர்கள் சில, பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களின் ஆசிரியர்களின் பெயர்களாகக் காணப்படுவதனால் பதினெண்
கீழ்க்கணக்கைச் சங்க நூல்களின் வரிசையிலே சேர்த்துவிட முடியாது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஒரே காலத்தில்
தோன்றிய நூல்கள் அல்ல. அவைகள் சங்க காலத்திற்குப் பின்னும், காவிய
காலத்திற்கு முன்னும் தோன்றிய நூல்களாக இருக்கலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் வெண்பாவினாலேயே பாடப்பட்டிருக்கின்றன. காவியங்கள் தோன்றிய காலத்திலே விருத்தப்பாக்கள்
பிறந்துவிட்டன. சிலப்பதிகாரத்திலே விருத்தப்பாக்கள் உண்டு;சிந்தாமணி
விருத்தப்பாக்களாலேயே ஆனது. வெண்பாவை விட விருத்தப்பாக்களினால்
எடுத்துக்கொண்ட பொருளை விளக்கமாகக் கூறமுடியும். பதினெண்
கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் காலத்திலே, விருத்தப்பாக்கள் தமிழிலே
பெருவழக்காக வழங்கவில்லை. வழங்கியிருக்குமானால், அவர்கள்
விருத்தப்பாக்களிலும் நூல்கள் இயற்றியிருப்பார்கள். ஆதலால் பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தை கி.பி. இரண்டாம்
நூற்றாண்டுக்குப் பின்னும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னும் என்று
தீர்மானிக்கலாம். இந்த இடைக்காலமாகிய நானூறு ஆண்டுகளிலே பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியிருக்கலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே முன்னே தோன்றிய நூல் எது?
பின்னே எழுந்த நூல் எது? என்று முடிவுகட்டுவது அவ்வளவு எளிதன்று.