பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்45

New Page 1

போகட்டும்; ஆட்டுக் குட்டியையும் விட்டுவிடுங்கள்; மணமுள்ள மதுவை
அதை விரும்பும் தன்மையுள்ளவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்பதே
இதன் பொருள். இது தமிழர்கள் தெய்வத்தைப் பூசித்த முறையைக் கூறிற்று.

இவ்வுலகத்திற்கு அப்பால் இன்பம் நுகரக் கூடிய சுவர்க்கலோகம் ஒன்று
உண்டென்று நம்பினர். இதனை 62-வது வெண்பாவிலே காணலாம்.

சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்பவை திருமாலின் படைகள்
பொன்னால் இப்படைகளைச் செய்து குழந்தைகளின் கழுத்திலே
கட்டியிருப்பார்கள். இதற்கு ஐம்படைத்தாலி என்று பெயர். இத்தகைய
ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இந்நூலில் கூறப்படுகின்றது. இதை
இந்நூலின் 66-வது வெண்பாவால் அறியலாம்.

குழந்தைகள் பூணும் நகையையே பண்டைக் காலத்தில் தாலி என்று கூறிவந்தனர். பிற்காலத்தில்தான் தாலி என்பது, கணவனால் மனைவியின் கழுத்திலே கட்டப்படும் ஒரு குறிப்பிட்ட அணியைச் சுட்டி வந்தது.

இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் ஒரு உண்மை நமக்கு வியப்பைத்
தருகின்றது. சூரிய வெப்பத்தால்தான் நிலத்தில் உள்ள நீர் ஆவியாக
மேலெழுந்து மேகமாகி மழை பெய்கின்றது என்பதுதான் அவ்வுண்மை.
‘‘எல்லைதருவான், கதிர் பருகி ஈன்ற கார்’’ (பா.105) ‘‘பகலைத் தருகின்ற
சூரியனுடைய கிரணங்கள், நிலத்தில் உள்ள நீரைப்பருகிப் பெற்ற மேகங்கள்’’
என்பதே அவ்வரியின் பொருள்.

மேகங்கள் தனிப்பொருள்கள்; இந்திரன் ஆணைக்கு அடங்கியவை;
உயிர் உள்ளவை; என்று மக்கள் நம்பியிருந்த அக்காலத்தில் இவ்வாசிரியர்
இவ்வுண்மையைக் கூறியிருப்பது வியப்புக்குரியதல்லவா?