பக்கம் எண் :

48சாமி சிதம்பரனார்

New Page 1

இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் காட்சி, இயற்கைக் காட்சி, காட்டிலே
இக்காட்சியைக் கார் காலத்தில் இன்றும் காணலாம்.

மற்றொரு அருமையான செய்யுள். இச்செய்யுளும், தலைவிக்குத் தோழி கூறும் ஆறுதல் மொழியாக அமைந்திருப்பது.
 

  ‘‘கல்பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல்இசை ஏறொடு வானம் நடுநிற்பச்,
செல்வர் மனம்போல் கவின்ஈன்ற; நல் கூர்ந்தார்
மேனிபோல் புல்என்ற காடு.                      (பா.8)
 

மலை நெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி
வருவதனால், அவர் வரும் வழியிலே மிகுந்த இடியோடு கூடிய மேகம்
வானத்தின் உச்சியிலே நின்று மழையைப் பொழிந்தது. அதனால்
வறுமையுள்ளவர்களின் உடம்பைப் போல வாடி வதங்கியிருந்த காடுகள்
செல்வம் உள்ளவர்களின் உள்ளம் போல் அழகைத் தந்தன’’.

மழையில்லாத காலத்தில் காட்டில் உள்ள மரம் செடி கொடிகள் வாடிச்
சோர்ந்து கிடந்தன; வெயில், அக்காட்டை வாட்டி வதக்கிக்கொண்டிருந்தது.
ஆதலால் அந்தக் காடு பார்ப்பதற்கு அழகில்லாமல் பொலிவிழந்து கிடந்தது.
மழை பெய்தபின் காடு செழித்தது. மரம், செடி, கொடிகள் தழைத்துக்
காய்த்துக் குலுங்கியிருந்தன. இது கண்ணுக்கினிய காட்சியாக இருந்தது.
கோடையால் வாடியிருந்த காடு வறுமையால் வாடுகின்றவன்
உடம்பைப்போல் வற்றியிருந்தது; மழையால் செழிப்புற்ற காடு
செல்வமுள்ளவன் நெஞ்சம்போல் செழித்திருந்தது; என்று இக்காட்சியை
உவமையுடன் விளக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது.