பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்49

New Page 1

செல்வச் சிறப்பு

செல்வம் உள்ளவர்களே வாழ்க்கையில் இன்பம் அடைய முடியும்; புகழ்
உள்ளவர்களாக வாழ முடியும்; செல்வம் இருந்தால்தான் வறியோர்க்கு
வழங்கி உதவி செய்யலாம்; ஆதலால் இல்லறத்தில் வாழ்வோர்
பொருளீட்டுவதை முதன்மையாகக் கொள்ளவேண்டும். இது இவ்வாசிரியர்
கருத்து.
 

  ‘‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்
 
இம்மை மறுமை இன்பங்கள் பொருந்துவதற்குரிய செல்வத்தைத்
தேடிக்கொண்டுவரும் பொருட்டுச் சென்றார்’’ (பா.11)
 
  ‘‘கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅமகிழ் வண்டு பாண்முரலும்
 
அழியாத புகழை விரும்புகின்ற செல்வர்களின் சிந்தையைப்போல,
கெடாத மகிழ்ச்சியை உடைய வண்டு இசை பாடிக்கொண்டிருக்கும்” (பா.32)

இவைகள் செல்வத்தால் பெறும் இன்பத்திற்கு எடுத்துக் காட்டுக்கள்.
 

  ‘‘நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும்
தன்செய்வான் சென்றார்.
 
தம்மை நாடி வந்தவர்க்குக் கொடுப்பதும், பகைவரை அழிப்பதும்
தமக்குப் புகழ்தரும் என்று நினைத்துப் பொருள் தேடச் சென்றார்’’. (பா.7)
 
  ‘‘மண்இயல் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்இயல் நல்லாய் பிரிந்தார்.
 

பெண்தன்மை நிறைந்த சிறந்தவளே! அவர் இவ்வுலகிலே நிலையான
புகழைப்பெற விரும்பியே பொருள் தேடப் பிரிந்தார்’’ (பா.8)