பக்கம் எண் :

களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பற்றி மட்டும் பாடப்பட்டிருப்பது.
சோழ மன்னன் ஒருவன் போரிலே பெற்ற வெற்றியைப் புகழ்வது. இந்நூலைப்
படிக்கும்போது போர்க்களத்தின் பயங்கரமான காட்சியைக் காணலாம்;
வளர்ந்துவரும் மனித சமுதாயத்திலே போர் என்பது ஒரு அநாகரிகம் என்ற
உணர்ச்சியை இந்நூல் ஊட்டாமல் போகாது.

முப்பால்-திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கும்
முப்பால் என்பது திருக்குறள் அன்று என்று கூறுவோர் சிலர். முப்பால்
என்பது திருக்குறள் அன்று வேறு ஏதோ ஒரு சிறு நூலாக இருக்க வேண்டும்
என்பது இவர்கள் கருத்து.

திருக்குறள் தமிழ் நூல்களிலே மிகப் பழமையான நூல். சங்க காலத்து
நூல்; மிகச்சிறந்த நூல்; ஒப்புயர்வற்ற நூல்; ஆதலால் அதைப் பதினெண்
கீழ்க்கணக்கு நூல்வரிசையிலே சேர்ப்பது தவறு; இது திருக்குறளுக்குப்
பெருமையளிப்பதாகாது என்பதே இவர்கள் கருத்து. இக்கருத்து தவறானது
என்பதைத் திருக்குறளைப் பற்றிக்கூறும் இடத்திலே விளக்கப்பட்டிருக்கின்றது.
முப்பால் என்பது திருக்குறள் தான் என்பதிலே ஐயம் இல்லை. பண்டைப்
புலவர்கள் பலரும் திருக்குறளை முப்பால் என்ற பெயரால்
குறிப்பிட்டிருக்கின்றனர். இதற்குத் திருவள்ளுவமாலை ஒன்றே போதுமான
சான்றாகும்.
 

வள்ளுவனார்,முப்பால் மொழிந்த மொழி

(மாமூலனார்)

பாமுறைதேர் வள்ளுவர் முப்பால்

(சீத்தலைச் சாத்தனார்)

வள்ளுவர் முப்பால்

(மருத்துவன் தாமோதரனார்)