E. mind, Skt. manas, Ger. menos, L. mens.
முன் - முன்னம் - முன்னர். முன் - முன்பு.
முன் - முனை - முனைவன். முன் - முந்து. முந்தல் - முதல் =
முதன்மை, முதலி, முதலாளி.
முதல் - முது = முதுமை, பேரறிவு. "முதுவா
யிரவல" (சிறுபாண். 40). முதுக்கு + உறை - முதுக்குறை.
முதுக்குறைதல் = அறிவுமிகுதல், மகளிர் பருவமடைதல்.
’புத்தியறிதல்’ என்னும் வழக்கை நோக்குக. முது -
முதிர்.
L. maturus, ripe, E. mature.
முது - மூ = மூப்பு, மூத்தோன், மூ ப்பன்,
மூத்தாள். மூதேவி = மூத்த தேவி.
முன் - முனை = முன்பக்கம். எ- டு:
போர்முனை.
முன் = ஒரு கூரான பொருளின் முன்புறம்,
கூர். முன் - முனி - நுனி - நுதி - துதி. துதிக்கை =
கூரியதாய் முடியும் யானைக்கை. நுனித்தல் =
கூர்த்தல். முன் - முனை - நுனை. முனை - குனை - கொனை =
நுனி. நுனியைக் கொனையென்பது வடார்க்காட்டு
வழக்கு.
Cf. E. cone, a pointed figure. Fr. cone, L. conus,
Gk. konos, a peak, peg a cone. Ch.E.D.
ஒ.நோ: கூர் - கூரை (கூராய் முடியும் முகடு).
முகம் = முன்பக்கம், தலையின் முன்புறம்
(face),
முற்பகுதி. குறுக்காக வளரும் விலங்கு பறவை
முதலியவற்றிற்கு முகமே முன்னாலிருப்பதையும்,
நூன்முகம் (preface),
போர்முகம், முகவுரை, முகமுடைவரி முதலிய
வழக்குகளையும் நோக்குக.
முகம் < Skt.
mukha. Cf. L. facies, It. faccia, Fr. face, E. face.
Face என்னும் ஆங்கிலச்சொல் முகம்
என்னும் தமிழ்ச்சொல்லை ஒலியாலும் பொருளாலும்
வழக்காலும் ஒத்திருக்கின்றது.
ம - வ - f
போலி. c
= k
(Latin).
ஆனால், சேம்பரார் அகராதியில் facio
(to make) என்ற இலத்தீன் பகுதியினின்று
face
என்னும் சினைப்பெயர் பிறந்ததாகக்
கூறப்பட்டுள்ளது. தமிழில், முகம் என்பது தோற்றம்
என்றும், முகஞ்செய்தல் என்பது தோன்றுதல் என்றும்
பொருள்படுதலால், facies
என்னும் சினைப்பெயரினின்றே facio
(to cause to appear) என்னும் வினை
பிறந்ததாகக் கொள்வது சிறந்தது. இனி, அவர்
கருத்துப்படியே கொள்ளினும், facio
என்னும் சொல் வகு என்னும் தமிழ்ச்சொல்லை
ஒலியாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றதைக்
காண்க. வகுத்தல் = படைத்தல், செய்தல். "என்னை
வகுத்திலையே விடும்பைக்கிடம் யாது
சொல்லே"(தேவா. 643: 2).
முகத்தலை - முகதலை (முன்றானை). முகவாசல்
= முன்வாசல். முகவாய்- மோவாய் = முன்வாய். முகமன் =
முகத்திற் கூறும் புகழுரை.
|