‘எனக்கு ஒரு கத்தி வேண்டும்’ என்பதை ’knief’
என்றும், ‘இதன் விலை என்ன?’ என்பதை ’price?’
என்றும் ஒரே சொல்லால் குறிக்கலாமன்றோ? இவன்
தன் மொழிக்குப் பெரியவனாயினும் அயன்மொழிக்குக்
குழந்தையா யிருக்கின்றான். குழந்தையும் நோயாளியும்
பெரும்பாலும் ஒவ்வொரு சொல்லாலேயே தம் கருத்தை
யறிவிக்கின்றனர்.
பெரியோர் தாய்மொழியிற் பேசும் பேச்சில்
ஒருசொல்விடைகள் தொகை வாக்கியங்களாகக்
கருதப்படலாம். ஆனால், அயன்மொழி நன்றாயறியாதான்
அம் மொழியிற் பேசினால், தாய்மொழியில் தோன்றும்
சொற்கள் அவ்வயன் மொழியில் தோன்றாமையும்,
ஒரு குழந்தை பேசின் தாய்மொழியிலும் சொற்கள் தோன்றாமையும்
உணர்க.
மொழி நிரம்பாத முந்துகால (primitive)
மாந்தன், கருத்து வெளியீட்டில் குழந்தை போன்றவன்.
அவன் ஆ ஈ வா போ கீ மே முதலிய சில தனியசை களாலும்
சில சைகைகளாலுமே, தன் கருத்தைப் புலப்படுத்தினான்.
இவ் வியல்பை இன்றும் சில மலைவாணரிடமும் தென்கண்டத்
தீவாரிடமும் காணலாம். இந் நிலையை ஒருவாறு விலங்கு
நிலைக்கு ஒப்பிடலாம்.
ஓர் இயன்மொழி (1) அசைநிலை, (2)
சொன்னிலை என இரு நிலைகளையுடையது. அசைநிலையாவது பெயர்
வினை இடை என இலக்கணச் சொற்றன்மைப்படாமல் நாற்சொற்
பொதுவாய் நின்று, தனித்தனி யசைகள் ஒவ்வொரு
பொருளையுணர்த்தும் நிலை; சொன்னிலையாவது இலக்கணச்
சொற்றன்மைப்பட்ட நிலை. அதுவும் (1) அசைச்சொல் (கண்,
ஆ), (2) புணர்ச்சொல் (கண்ணவன்), (3) பகுசொல் (கண்ணன்),
(4) தொடர்ச்சொல் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள்,
தொடர்ச்சொல் (1) தொகா நிலைத்தொடர் (தண்ணீர்,
செங்கால்நாரை), (2) தொகைநிலைத் தொடர் (யாய்,
சாத்தந்தை) என இருவகையது.
மொழி வளரவளர எழுத்துக்கலையும் வளர்ந்துவரும்.
உலகில் முதலாவது படவெழுத்தும் (Hieroglyph)
பின்பு கருத்தெழுத்தும் (Ideograph)
தோன்றின. அதன்பின் அசையெழுத்தும் (Syllabic
Character), ஒலியெழுத்தும் (Phonetic
Character) முறையே தோன்றின. இவற்றுள்
முன்னவை யிரண்டும் கருத்தோடும் பின்னவை யிரண்டும்
மொழியோடும் தொடர்புற்றவை. பெருவளர்ச்சி யடைந்த
ஒரு நாகரிக மக்கள் மொழியில்தான் பின்னீரெழுத்துகளைக்
காணலாம்.
ஒரு மொழியை அல்லது பேச்சைப் பல
வாக்கியங்களாகவும் ஒரு வாக்கியத்தைப் பல
சொற்களாகவும், ஒரு சொல்லைப் பல எழுத்துகளாகவும்
பகுத்துக்கொள்வது, ஒரு மொழி பெருவளர்ச்சியடைந்தபின்
அதன் இலக்கணத்தை யெடுத்துக்கூறும்போது நிகழ்வதாகும்.
மொழித்தோற்றம் வேறு; இலக்கணத் தோற்றம் வேறு.
மொழி அசையொலிகளாய்த் தோன்றினதேயன்றி எழுத்தொலிகளாய்த்
தோன்றவில்லை. எழுத்தே இலக்கண வகையில் ஒரு
மொழியின் அலகு (unit);
வாக்கியம் அலகன்று. ஏனெனின், வாக்கியம் ஒரு
|