பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்30

காதலையுண்டாக்கும் காமன். மோகம் - மோகி + அனம் - மோகனம் = பெருவிருப்பம், காதல், வசியம், மயக்குகை. மோகனம் செய்யும் பேய் மோகினி.

முகம் - முகர். முகர்தல் = மோத்தல்.

முகடு = முகம் (மூக்கு) போற் கூரிய கூரை, மலையின் மேற்பகுதி. முகடி = முகட்டிலிருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி. முகடி = முகரி. முகட்டை - மூட்டை = முகட்டிலிருந்து விழும் பூச்சி.

முகம் - முகிழ் - முகை - மொக்கு = மூக்குப்போற் குவிந்த மொட்டு. மொக்கு - மொக்குள் = மொட்டு, மொட்டுப்போன்ற குமிழி. மொக்குளித்தல் = குமிழி தோன்றுதல். மொக்கை = முகம், குவிவு, திரட்சி, கூட்டம்.

பறவைகட்கு மூக்குப்போல் முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு வாயாயிருத்தலால், முகம் என்னும் சொல்லுக்கு வாய்ப்பொருளும் சிறுபான்மையுண்டு. இப் பொருள் வடமொழியிற் குறிக்கப்படுவது. ஆயினும், முகம் என்னும் சொல்லுக்குத் தலையின் முன்புறம் என்பதே முதற்பொருளென் றும், ஏனை மூக்கும் வாயும் வழிப்பொருளென்றும், முன்மையை யுணர்த்தும் ’மூ’ என்பதே வேரென்றும் அறிதல் வேண்டும். பறவையின் அலகு மூக்குப் போல்வதால் மூக்கெனப்பட்டது. அதன் உண்மையான மூக்கு அலகில் இரு துளையாய்மட்டு மிருக்கும்.

முகம் - மூகு - மூக்கு. மூக்கு = மூக்குச்சளி (L. mungo, E. mucus), மூக்குப்போன்ற பாகம். மூக்கு - முக்கு = மூக்குப் போன்ற தெரு, மூலை.

Ir. niuc, Scot. neuk, E. nook.

முக்கு - முக்கை = ஆறு திரும்பும் மூலை.

மூக்கு - (1) E. beak, Fr. bec, Celt. beic.

(2) E. peak = மூக்குப்போற் கூரிய மலைமுகடு.

ஒ.நோ: முகம் - முகடு = குவடு.

(3) E. pike = மூக்குப்போற் கூரிய கம்பி. Celt., Gael. pik, W. pig, L.spika, E. spike, spoke, A.S. spaca, Ger. speiche.

மூக்கு - மூங்கு - மூங்கா = மூக்கு நீண்டிருக்கும் கீரி.

தெ. முங்கி, முங்கிச, E. mungoose.

மூங்கு - மூஞ்சு - மூஞ்சி = மூக்கு, முகம். மூஞ்சிச்சுவர் = gable wall. மூஞ்சி - மூஞ்சை = நீண்ட மூக்கு, நீண்ட முகம். மூஞ்சு + எலி - மூஞ்செலி (musk - rat) - மூஞ்சுறு - மூஞ்சூறு. மூஞ்சு (மூக்கு)நீண்ட எலி மூஞ்செலி. மூஞ்செலி என்பதே இன்றும் தென்னாட்டு வழக்கு. மூஞ்சி (மூசி).

Ice. nos, A.S. nosu, Ger. nase, L. nasus, Skt. nasi.