பக்கம் எண் :

12மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அடி கோலப்பட்டது. ஊர்வாரியம், கோவில் வாரியம், கழனி வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், கலிங்கு வாரியம், பொன் வாரியம், தடிவழி (Trunk Road) வாரியம், ஆட்டை வாரியம், பஞ்சவார  வாரியம்,  என்னும்  வாரியப் பாகுபாடே அதைத் தெளிவாய்க் காட்டும்.

  அரசன் பகல்தொறும், முதற்  பத்து  நாழிகை  கொடை  வழங்குதற்கும், இரண்டாம் பத்து நாழிகை முறை செய்தற்கும், மூன்றாம் பத்து நாழிகை தன் அரண்மனை வாழ்க்கைக்கும் செல விட்டு, இடையிடை நாடு சுற்றியும் தன் காவல் தொழிலைச் செவ்வனே செய்துவந்தான். இக்காலத்தில், நாட்டுறுப்பு
(Constituents of State) ஆள்நிலம் (Territory) , குடிகள் (Population), அரசு (Government), கோன்மை  (Sovereignty) ,  ஒற்றுமை (Unity)   என ஐந்தென்பர் அரசியல் நூலார்.

  பண்டைத் தமிழகத்தில் ஆள்நிலம், குடிகள், அரசு, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என நாட்டுறுப்பு எட்டாகக் கொள்ளப்பட்டது. ஆள்நிலத்தைக் குடியிலும் அரசைப்  பொருளிலும்   அடக்கி  வல்லரசுறுப்பு  ஆறென்றார் திருவள்ளுவர்.

  போர்க்காலத்திலும் புதுவிறல்தாயம் என்னும் புதுநாடு பேற்றுக்காலத்திலும், படையின் முதன்மையும் இன்றியமை யாமையும் விளங்கித் தோன்றும். பழம் பாண்டிவேந்தர்  கரிபரி  தேர்கால்  என்னும்  நால்வகை  நிலப்படையொடு கலப்படையும் வைத்திருந்தனர். அதனால், குமரிமலை மூழ்கியபின்  வடதிசைக் கங்கையும்  பனிமலையுங்  கொள்ளவும்,  சாவகம்  என்னும்  சாலித்தீவின் கடற்கரையிற் பாதம் பொறிக்கவும் இயன்றது.
  
  தமிழன் உலகமுதற் சுற்றுக்கடலோடியா
(circumnavigator) யிருந்தமையை, இன்றும் வடவை (Aurora Borealis), நாவாய் (L. navis - E. navy) ,   படகு (L. barga - E. barge, L. barca - E. bark) முதலிய சொற்கள் உணர்த்தும்.

   காலாட்படை   நாட்டுப்படை   யென்றும்   காட்டுப்படை   யென்றும் இருவகைப்பட்டிருந்தது. காட்டுப்படை பாலைநில மறவரைக் கொண்டது. பாலை குறிஞ்சியின் மருங்கும்  மாற்றமு  மாதலாலும்,  தமிழர்  உலகமுதல் நாகரிக மாந்தரினத்தா ராதலாலும் மறவர்குடி முதுகுடி யெனப்பட்டது.

 
"முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும்"
(தொல். புறத். 24)