பக்கம் எண் :

128மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

                           (திருவிளை. திருநாட். 58)


என்று 16ஆம் நூற்றாண்டிலேயே பரஞ்சோதி முனிவர் மறைமுகமாகக் கண்டித்திருத்தல் காண்க.

  இனி, கோவிற் பூசாரியரும் கருமத் தலைவரும் தொன்மிகரும் (புராணிகரும்) தத்தம் கோவிற்கே வருமானம் மிக வேண்டுமென்று போட்டியிட்டு, கமலையில் (திருவாரூரில்) பிறக்க வீடுபேறென்றும், காசியில் இறக்க வீடுபேறென்றும், காஞ்சியில் இருக்க வீடுபேறென்றும், தில்லையைக் காண வீடுபேறென்றும், அருணையை (திருவண்ணாமலையை) நினைக்க வீடுபேறென்றும், காளத்தியில் வழிபட வீடு பேறென்றும், பிறவிடத்திற் பிறவாறு வீடுபேறென்றும், வணிக முறையிற் கூறுவது இறைவன் நிலைமைக்கு ஏற்காது.
 

10. மூடநம்பிக்கையும் பழக்கவழக்கமும்
 

  மணமக்கட்குக் கணியப் பொருத்தம் பார்ப்பது சரியன்று. அவ்வினையினால், பொருத்தமுள்ளது பொருத்த மில்லாததாகவும், பொருத்தமில்லாதது பொருத்தமுள்ளதாகவும் தோன்றலாம். சென்னைச் சிறுவழக்கு மன்றத் தீர்ப்பாளராக இருந்த பம்மல் சம்பந்த முதலியாரின் அன்னையாரை, அவர் தந்தையாரான பம்மல் விசயரங்க முதலியார்க்கு மணம் பேசியபோது, சென்னையிலிருந்த முப் பெருங் கணியரும், அம் மணத்திற்குப் பொருத்தமில்லை யென்றும், மணம் நிகழின் மணமகள் மகவு பெறாது விரைந்து அமங்கலையாவாள் என்றும் கூறிவிட்டனர். ஆயின், மண மகனார்க்கு மனப்பொருத்தம் மட்டிற்கு மிஞ்சியிருந்தது. அதனால் மணம் நிகழ்ந்தது. மணமகளார் நீடுவாழ்ந்து நாற்புதல்வரும் நாற்புதல்வியருமாக எண்மக்களைப் பெற்று, அறுபதாங் கலியாணத்தின் பின்பும் பல்லாண்டு மங்கலியராயிருந்து வாழ்வு முடிந்தார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யான் கண்ட புலவர்கள் என்னும் வரலாற்றுக் கட்டுரைப் பொத்தகத்தைப் பார்க்க.

  கணியார்க்குத் தம் வாழ்வுக் காலத்தையே கணிக்க வியலாதே! பிறர் வாழ்வை எங்ஙனங் கணிக்க வியலும்? கணியர்க்குப் பிழைப்பு நடப்பது தவிரக் கணியத்தால் யாதொரு பயனுமில்லை.