இனி நாளும் வேளையும் பார்ப்பதும் நன்றன்று. ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில், ஓர் அலுவலகத் தலைவரா யிருந்த துரை, தம்மிடம் வேலைக்கு வேண்டுகோள் விடுத்த ஓர் இளைஞனை, ஒரு திங்கட் கிழமை காலை 8 மணிக்குத் தம்மை வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். அவன் இராகு காலங் கழித்து 9 மணிக்கு மேற்சென்று, சினத்தொடு துரத்தப் பட்டான். திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியாரின் வேண்டு கோட்கிணங்கிச் சமணரையடக்க மதுரைக்குப் புறப்பட்ட போது, இன்று செவ்வாய்க் கிழமையாதலாற் செல்ல வேண்டாவென்று திருநாவுக்கரசர் தடுத்தார். ஆயின், சம்பந்தர், "வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியா ழம்வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே" என்று பாடிச்சென்று முழுவெற்றி கண்டார். இனி, வீட்டுவாசலைக் குட்டையாக வைத்து முட்டிக் கொண்டு வாசல் தட்டிவிட்டதென்றும், வீட்டில் வளர்க்கப்படும் பூனை வெளியே வரின் பூனை குறுக்கிட்டதென்றும், வினைத் தடையென்று மனந்தளர்வதும், மூவர் போன கருமம் மூதேவியடையும் என்பதும், மூடநம்பிக்கையே. இனி, இளையவனுக்கு முந்தித் திருமணம் நடத்த நேரின் மூத்தவன் வாழைவெட்டிக் கலியாணம் செய்துகொள்வதும், பகலில் நிகழும் சடங்கிற்கும் விளக்கேற்றிக் கொள்வதும், இரப்போர்க்கு இடும்போதும் குலத்தாரையும் மதத்தாரையுமே பார்த்திடுவதும், உண்டு மிஞ்சியதையும் பிற குலத்தார்க்குக் கொடுக்கக் கூடாதென்று புதைத்து வைப்பதும், இடுகாட்டிற் புதைத்தபின் பால் வார்ப்பதும், சுடலையில் எரித்தபின் எலும்பை ஆற்றிலிடுவதும், பொருள் தெரியாதனவும் பயனற்றனவுமான வீண்சடங்குகளை வழிவழி குருட்டுத்தனமாகக் கைக்கொள்வதும், மூடப் பழக்கவழக்கங்களாம். |