என்னும் தம் சிறுநூலில், கால்டுவெலாரின் வழூஉக் கூற்றை வலிய சான்றாகக் காட்டியுள்ளார்.
எண்வேற்றுமை யமைப்பிலும் தமிழ் சமற்கிருதத்தைப் பின் பற்றியதென்று, கால்டுவெலார் தவறாகக் கூறிவிட்டார். இலத்தீனில் ஆறு வேற்றுமையும், கிரேக்கத்தில் 5 வேற்றுமையும், செருமானியத்தில் 4 வேற்றுமையுமே இருக்கும்போது, சில நூற்றாண்டுகளாக எழுத்தில்லாதிருந்து தமிழைப் பின்பற்றி வண்ணமாலையமைத்துக் கொண்ட கீழையாரியத்தில் மட்டும் திடுமென்று எங்ஙனம் எண் வேற்றுமை தோன்ற வியலும்? மேலும், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்படுத்தப்பட்டிருந்ததும் பல்துறைப்பட்ட விரிவான செய்யுளிலக்கியத்தைக் கொண்டிருந்ததும், எழுத்து, சொல், யாப்பு, அணி யென்னும் நால்வகை யிலக்கணத்தொடு வேறெம் மொழியிலும் இன்றுமில்லாத பொருளிலக்கணத்தை யுடையதுமான, தமிழ் எங்ஙனம் தன் இயல்பிற்கு முற்றும் ஏற்ற சொல்லிலக்கணக் கூறொன்றை, இன்னொரு புது அயற் கலவை மொழியினின்று கடன் கொண்டிருத்தல் கூடும்? இவை யெல்லாம் தமிழ் வரலாற்றை அறியாமையால் நேர்ந்த விளைவேயன்றி வேறன்று.
இனி, தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியதென்றும், ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச் சொற்கட்கெல்லாம் தமிழ் முச்சுட் டொலிகளே மூலமென்றும், சமற்கிருதம் திரவிட மொழிகளினின்று ஏராளமான சொற்களைக் கடன்கொண்டுள்ளதென்றும், கால்டுவெலாரே தம் நடுநிலை யாராய்ச்சியால் உண்மைகண்டு கூறியிருப்பது, மேற்கூறியவற்றொடு முரணுதலுங் காண்க.
சமற்கிருதச் சொற்களை நடுநிலையாய் ஆய்ந்து பார்ப் பின், அவற்றுள் ஐந்திலொரு பங்கு மேலையாரியமும், ஐந்தி லொரு பங்கு வடஇந்திய முந்துமொழியாகிய முது திரவிடமும், ஐந்திலிரு பங்கு தமிழும், ஐந்திலொரு பங்கு புத்தாக்கமும் ஆகும் என்பது, தெளிவாய்த் தெரியும்.
இலக்கியத்திலும், சமற்கிருத இசை நாடக நூல்கட்கு முதனூல்கள் தமிழ் நூல்களே.
ஆரியப் பூசாரியர் தம் வெண்ணிறத்தால் தம்மை நிலத்தேவ ரென்றும், தம் இலக்கிய மொழியின் வெடிப் பொலியால் அதைத் தேவமொழியென்றும், தமிழப்