முற்றும் மறந்துபோன குடும்பத்தாரையும், கொள்ளை யடித்தும் கொன்றும் உயிர்தப்பியோடிப் போகச் செய்தும், உரிமைகளைப் பறித்தும், தம்மை வாழ்வித்தவரின் வழியினரை வெளியேற்றி விட்டனர். இவ்வகையில் எல்லையில்லாக் கொடுமைக்கு ஆளானவர் இலங்கைத் தமிழரும் காழக (பர்மா)த் தமிழரும். ஒரு நாட்டிற் பன்னீராண்டு தொடர்ந்து குடியிருந்தவர்க்கெல்லாம் குடியுரிமையுரியதாகும். அவரை நாட்டைவிட்டகற்றுவது நாகரிக அரசிற் குரியதன்று.
தமிழ்நாட்டிலும் பல வெளிநாட்டினர் குடியேறியுள்ளனர். அவர்களை யெல்லாம் வெளியேற்றின், தமிழ்நாட்டு மக்கட் டொகை மிகக் குறையும். வேலையில்லாத் திண்டாட்டமும் நீங்கும். ஆயின், மாந்தன் தோன்றியது முதற் பண்பட்டு வந்த தமிழ்நாடு அப் பழிவினை செய்யாது.
தமிழ்நாட்டிற்குக் கோன்மை (sovereignty) இருந்திருப்பின், அநாகரிக அரசுகளுடன் எதிர்த்துப் போராடித் தமிழரின் உரிமையைக் காத்திருக்கும். இந்திராகாந்தி யம்மையார் இலங்கைத் தலைமை மந்திரினியார் சிரீமாவோ பண்டார நாயகின் விருப்பத்திற்கிணங்கி, இலக்கக்கணக்கான இந்தியரை நாடுதிருப்பச் செய்துகொண்ட ஒப்பந்தம் சரியானதன்று. இந்தியக் குடியேறிகளின் குடியுரிமையைக் காவாததனால், யாழ்ப்பாணத் தமிழரின் நாட்டுரிமை மொழியுரிமைகளும் தாக்கப்பட்டுவிட்டன.
இலங்கையரசின் அட்டூழியத்தைக் கண்டித்துத் தமிழ் நாட்டுச் சட்டசவையிலேனும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படல் வேண்டும். ஏற்கெனவே இலங்கையினின்று நாடுதிருப்பப்பட்டவரும், இலங்கையிற் காத்துக்கொண்டிருப்பவரும், பலவகை யிடர்ப்பாட்டுள் திண்டாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதை ஆய்ந்து, அவர்களை ஏந்தான வாழ்வுபடுத்த ஒரு குழுவை இந்திய அரசு ஏற்படுத்துதல் வேண்டும்.
இலங்கையை எளிதாக வென்றடக்கிய பண்டைப் பாண்டியருஞ் சோழரும் முன்னோக்கின்றி நடந்து கொண்டதனால், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்துகின்றது.
10. தென்னிந்தியத் தலைநகரம்
இந்தியா பல நாடுகளையும் மக்களையும் மொழிகளையும் தட்ப வெப்பநிலைகளையுங் கொண்டு, தென் வடலாக 3200 அமா (km.) நீண்டிருப்பதனாலும், அதன்