பக்கம் எண் :

முன்னுரை29

13. அதிகாரப் பகுப்புவகை
   ஒற்றையாட்சி
(Government by Single Authority), இரட்டையாட்சி (Diarchy)
14. கட்சிவகை 
  ஒருகட்சி  யாட்சி  (One-party  System of Govt.),   இரு  கட்சியாட்சி (Two-party System of Govt.), பல்கட்சியாட்சி (Multi-party System of Govt.).


6. கூட்டுடைமைத் தோற்றம்

  1765-ல்  நீராவிச்  சூழ்ச்சியப்பொறி  புதுப்புனையப்பட்டதன்  விளைவாக, சென்ற நூற்றாண்டில்  ஐரோப்பிய  நாடுகளில்  இரும்பு  நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலைகளும்   நூற்பு  நெசவாலைகளும்  ஆங்காங்கு    ஏற்பட்டன. தொழிற்சாலை  முதலாளிகள்  ஆயிரக்  கணக்கான  தொழிலாளிகளை மிகக் குறைந்த  கூலிக்கு  அமர்த்திக்கொண்டு  மிகைவேலை  வாங்கி ஏராளமாகப் பொருளீட்டி    வந்தனர்.    வறுமையினாலும்    ஒற்றுமையின்மையினாலும் பெரும்பாடுபட்ட   தொழிலாளிகளை   முதலாளிகள்   கொடுமை  யினின்று மீட்க, காரல்  மார்க்கசு ( Karl Marx) என்னும் மீட்பர் 1818ஆம்  ஆண்டில் செருமனியில் தோன்றினார்.

  ஒரு தொழிற்சாலை நடத்தப் பணமுதல், தொழில்முதல் என இருமுதல்கள் வேண்டும்.  கருவி (முதற் கருவியும் பொறியும்), இடம் (தொழிற்சாலை), கூலி ஆகிய   மூன்றும்   பணமுதலால்  அமையும்.   தொழில்முதல்   என்பது தொழிலாளர் கைவினை. பஞ்சாலைக்குப் பருத்தியும், நூற்பாலைக்குப் பஞ்சும், நெசவாலைக்கு   நூலும்  போல்வது  முதற்கருவி.  பொறி   துணைக்கருவி. சுரங்கவினைக்கு முதற்கருவி இல்லை. நிலத்தினின்று எடுக்கப் படும் பொருளே செய்பொருளாகும்.

  பணமுதல்  போன்றே  தொழில்முதலும்  தொழிலுக்கு   இன்றியமையாதது. முன்னது ஒருவனிடம் மட்டும் உள்ளது; பின்னது பலரிடம் சிதறிக்கிடக்கின்றது. பணமுதலீடு இருவர் மூவர் சேர்ந்தும் செய்யலாம். ஆயின், நூற்றுக்கணக்கான அல்லது  ஆயிரக்கணக்கான  தொழிலாளர்  வேண்டிய   தொழிற்சாலையில், தொழிலாளர்  இருவர்  மூவர்  மட்டும்  சேர்ந்து  தொழில்  முதலீடு செய்ய முடியாது.  ஆதலால், ஒரு  தொழிற்சாலைத் தொழிலாளர் அனைவரும் ஒரு கூட்டாகச் சேர்ந்து தம் உரிமையைப் பெறல் வேண்டும்.