இருவகை முதலும் இன்றியமையாமையிற் சமமாக விருப்பதால் தொழிற்சாலையால் வரும் ஊதியத்திற் பாதி தொழிலாளரைச் சேர்தல் வேண்டும். அதை அவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யாது ஊதியம் முழுவதையும் பணமுதலாளி எடுத்துக் கொள்வது, தொழிலாளியின் உரிமையைப் பறித்தல் அல்லது பொருளைக் கொள்ளையடித்தலாகும். காரல் மார்க்கசு இங்ஙனம் வரலாற்றடிப்படையிலும் கணித முறைப்படியும் நேர்மையான அறிவியல் ஆராய்ச்சி செய்து முதல் (Capital) என்னும் தலைப்புள்ள நூலின் முதன்மடலத்தை 1867-இல் வெளியிட்டார்; தம் கொள்கையைப் பரப்பிப் பன்னாட்டுத் தொழிலாளர் கழகம் (The International Workingmens Association) என்னும் அமைப்பகத்தையும் நிறுவினார். 1883-இல் அவர் இறந்தபின் அவர் கூட்டாளியரான பிரடிரிக்கு எஞ்சுல்சு (Friedrich Engels) அவர் நூலின் 2ஆம் 3ஆம் மடலங்களை 1885-இற்கும் 1895-இற்கும் இடையில் வெளியிட்டார். இரசிய அரசர் (Tsar) கொடுங்கோலாட்சி செய்து வந்ததனாலும், முதலாம் உலகப் போரில் தோல்வியுற்று 1917-இல் அரியணை விட்டிறங்கியதனாலும், பெரும்பாலும் ஏழை மக்களாயிருந்த இரசியக் குடிகள், காரல் மார்க்கசு 1848-ல் வெளியிட்ட கொள்கையறிக்கையைப் (Manifesto) பயன்படுத்திக் கூட்டுடைமையரசை நிறுவினர். கொள்கையறிக்கையின் முதன்மையான நெறிமுறைகள் வருமாறு: 1) பொருளாக்க வகை வாழ்க்கையின் பல்வேறு நிலைமை களையும் தீர்மானிக்கிறது. 2) தனியுடைமையால் வகுப்புப் போராட்டம் ஏற்படுகிறது. 3) தொழிலாளரால் உண்டாக்கப்படும் மிகைவருமானம் தொழிலாளரைச் சேர்தல் வேண்டும். 4) குமுகாயப் புரட்சி இன்றிமையாதது. 5) தொழிலாளர் ஆட்சியை மேற்கொள்ளவேண்டும். 6) நாளடைவில் முதலாளி வகுப்பு நீங்கிவிடும். 7) ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்குத் தக்கவாறு உழைத்துத் தேவைக்குத் தக்கவாறு பெறுதல் என்னும் புதிய நிலைமை ஏற்படும். |