என்று, உலகத்தைப் படைத்த இறைவன் மேலும் தம் சினத்தைக் காட்டினார் திருவள்ளுவர்.
இரத்தலைத் தவிர்க்கவேண்டுமென்றே, இக்கால நன் மக்களும் அரசும் களைகண் இல்லம் (Orphanages), தொழுநோயர் விடுதி (Leper Home) , முதியோர் மனை (House for the Old) முதலியன ஆங்காங்குக் கட்டியும் அமைத்தும் உள்ளனர். ஆயினும், அளவிற்கு மிஞ்சி இருமடங்கும் மும்மடங்கும் மக்கட்டொகை பெருத்தும் ஆயிரக்கணக்கானவரும் இலக்கக் கணக்கானவரும் வேலையின்றியும் இருக்கும் இக்காலத்தில், வள்ளுவர் வகுத்த பாத்துண்டலே எல்லா மக்களும் பண்பாட் டுடன் வாழ்தற்கு இன்றியமையாததாகின்றது.
3. மக்கட்பண்பாடு
ஆறறிவு படைத்த மாந்தன் உயிரினங்களெல்லாவற்றுள் ளும் தான் உயர்திணை அல்லது உயர்குலம் என்று அறிவதால், பாத்துண்ணும் இயல்புடைய காக்கை போலும் சில அஃறிணை யினங்களினும் பண்பாட்டில் தாழாவாறு, பாத்தூணறத்தைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளான்.
1. மன்பதை முழுதும் ஓரினம்
"யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்றார் பூங்குன்றனார் (புறம். 192). "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றார் திருமூலர் (திருமந். 2104). ஆதலால், ஒவ்வொருவனும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதல் வேண்டும்.
2. அடிப்படைத்தேவை அனைவர்க்கும் பொது