பக்கம் எண் :

1

முன்னுரை
நடை-ஒரு விளக்கம்


ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும்
சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே.
மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த
இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன.
இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது
தெளிவாகவும் இருக்கும். எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தமிழ்
நடைக் கையேடு
தொகுத்துத் தருகிறது.

நூலின் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ‘நடை’ என்ற சொல் ஒரு புதிய பொருளைப்
பெறுகிறது. ‘நடை’ என்பதற்கு ‘எழுத்தில் ஒருவர் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பாணி’
என்பது எல்லோரும் அறிந்த பொருள்; ‘ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான
நெறிமுறை’ என்பது மேலே கூறிய விளக்கத்தால் கிடைக்கும் புதிய பொருள். ‘ஒருவருடைய
நடைப் பாங்கு’ என்னும் தனிநபர் சார்ந்த பொருளுடன் ‘எழுதுவதில் மேற்கொள்ளும்
ஒழுங்கு’ என்னும் அமைப்பு சார்ந்த பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது, ‘நடை’.
 

உரைநடையின் நெறிமுறைகள்
 

இந்தக் கையேட்டில் ஆறு தலைப்புகள் பின்வரும் வரிசையில் உள்ளன:
 

 

1. நிறுத்தக்குறிகள்
2. சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்
3. சந்தி
4. சொல் தேர்வும் பொருள் தெளிவும்
5. எழுத்துப்பெயர்ப்பு
6. அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும்
 

 

நிறுத்தக்குறிகள், சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; கருத்துத் தெளிவிற்குத் துணைபுரிபவை. ஆனால்
மரபு இலக்கணங்களில் இடம்பெற்றிருப்பது சந்தி மட்டுமே. ஏனென்றால், தமிழில் சொல்
உருவாக்கமும் சொற்களுடன் விகுதிகள் இணைவதும் சந்தி விதிகளை (பெரும்பாலும்
அகச்சந்தியை) சார்ந்திருக்கின்றன. நான்காவதாக இடம்பெற்றிருக்கும் சொல் தேர்வும்
பொருள் தெளிவும்
என்பது நிறுத்தக்குறிகளாலும் சொற்களின்