பக்கம் எண் :

2

இடப்பொருத்தத்தாலும் இலக்கண நுட்பங்களாலும் திருத்தம் பெறும். ஐந்தாவதாக
இடம்பெற்றிருக்கும் எழுத்துப்பெயர்ப்பு பிற மொழி, பண்பாடு முதலியவற்றோடு
ஏற்பட்டுள்ள தொடர்பால் தேவையாகிறது. மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இதன்
தேவை மிகுதி. ஒரு நூலோ ஆராய்ச்சிக் கட்டுரையோ எழுதுபவர்களுக்கு அவர்கள்
கையாளும் ஆதாரங்களை முறைப்படுத்தித் தர ஆறாவதாக இடம்பெற்றிருக்கும்
அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும் உதவுகிறது. கடைசியாகக் கூறிய இரண்டும் மொழியில் சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே உரியவை.
 

சில தொடர்புகள்


நிறுத்தக்குறிகள், சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஓரிரு எடுத்துக்காட்டுகள்மூலம் விளக்கலாம்.

பின்வரும் எடுத்துக்காட்டு கால்புள்ளியும் ஒற்று மிகுதலும் ஒன்று வரும் இடத்தில்
மற்றொன்று வராமல் இருப்பதைக் காட்டுகிறது.

         வைதீக மரபுக்கு மாற்றாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின்...
         வைதீக மரபுக்கு மாற்றாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின்...

நிறுத்தக்குறிகளுள் ஒன்றான கால்புள்ளியைப் பயன்படுத்தும்போது ஒற்று இல்லாமலும்
சந்தியின் காரணமாக ஒற்று தரும்போது கால்புள்ளி இடாமலும் இருப்பது இன்றைய வழக்கு
என்பதைக் காண முடிகிறது.

பின்வரும் எடுத்துக்காட்டு சொற்களை இடம்விட்டு எழுதும்போது உடம்படுமெய்யை
விட்டுவிடும் நிலையையும் உடம்படுமெய்யைப் பயன்படுத்தும்போது சொற்களின் இடையே
இடம்விடாத நிலையையும் காட்டுகிறது.

          இறுதி ஆண்டு
          இறுதி யாண்டு

சொற்களை இடம்விட்டு (யகர உடம்படுமெய் தராமல்) எழுதுவது இன்று இயல்பாக
இருக்கிறது.

பின்வரும் எடுத்துக்காட்டு ‘ஒரு’ என்பது ‘அப்படி’ என்ற சொல்லுடன் இணைந்து
வரும்போது கிடைக்கும் பொருள் அது தனியாக எழுதப்படும்போது கிடைக்கும்
பொருளிலிருந்து வேறுபடுகிறது என்பதைக் காட்டும்.