| அப்படியொரு நாடகமாடினார். அப்படி ஒரு நாடகம் அரங்கேறியது. |
சொற்களைச் சேர்த்து எழுதுவதும் இடம்விட்டு எழுதுவதும் பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாகலாம் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், எழுதும் முறையால் பொருள் வேறுபடாத இடங்கள் ஏராளமாக உள்ளன. சில எடுத்துக்காட்டுகள்: |
| இறுதி ஆண்டு/இறுதியாண்டு செடிகொடி/செடி கொடி உழைப்புக்கு ஏற்ற/உழைப்புக்கேற்ற |
பொருள் வேறுபடாத இடங்களில் சொற்களைச் சேர்த்து எழுதுவதும் இடம்விட்டு எழுதுவதும் கருத்துத் தெளிவு, படிப்பவர்களின் பின்னணி போன்ற காரணங்களால் முடிவுசெய்யப்படுகிறது. |
புதிய நெறிகளும் அணுகுமுறையும் |
தற்காலத் தமிழ் உரைநடையைத் தரவாகக் கொண்டு புதிய நெறிகளையும் போக்குகளையும் கணித்து இந்தக் கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது. எழுதும்போது நெறிகளைப் பின்பற்றுவதில் இன்று மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. பல வேறுபாடுகள் எழுதுவோரின் அல்லது அச்சிடுவோரின் கவனக்குறைவு, அக்கறையின்மை ஆகியவற்றின் விளைவாக இருந்தாலும் வேறுசில தற்காலத் தமிழில் உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுகின்றன. இந்த நோக்கில் இந்த நூலில் தரப்பட்டுள்ள நெறிமுறைகளைத் தற்காலத் தமிழின் பெரும்பான்மை வழக்குகள் அல்லது விரும்பத் தகுந்த வழக்குகள் எனலாம். இந்த நெறிமுறைகளைப் பரிந்துரைகள் என்றே சொல்ல வேண்டும். ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ் உரைநடையிலிருந்து தற்காலத் தமிழின் உரைநடை இந்த நெறிமுறைகளில் பெரிதும் வேறுபடுகிறது. தற்காலத் தமிழ் உரைநடைக்கான புதிய நெறிமுறைகள் இதுவரை தொகுக்கப்படவில்லை. புதிய நெறிகளில் ஒன்று சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல் என்பதாகும். தமிழில் சொற்களைச் சேர்த்து எழுதுவதிலும் பிரித்து எழுதுவதிலும் ஒரு தெளிவான வரையறை இல்லை. இதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டிச் சில அடிப்படைகளை அமைத்துத்தந்து எழுதும் முறைக்கு ஒரு தெளிவு தருவது இன்றைய தேவை. இந்தக் கையேடு அந்தத் தேவையை நிறைவுசெய்கிறது. சொற்களைச் சேர்ப்பதும் பிரிப்பதும் தெளிவுபடுத்தப்படாமல் இருப்பது போலவே தற்காலத் தமிழ் உரைநடையில் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த வேண்டிய முறையும் தெளிவுபடுத்தப்படவில்லை. குறிப்பாக, கால்புள்ளி பயன்படும் இடங்கள் குறித்துச் சரியான வழிகாட்டுதல் இல்லை.
|