கால்புள்ளி மற்றும் பிற நிறுத்தக்குறிகளின் பயன்பாட்டை இந்தக் கையேடு தெளிவுபடுத்துகிறது. சொற்களை எழுதும் முறை, நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தும் முறை ஆகிய இரண்டையும் விளக்கிக்காட்டுவதன் மூலம் சந்தி குறித்தும் தெளிவு ஏற்படுகிறது. இம்மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பைச் சில எடுத்துக்காட்டுகள்மூலம் முன்னரே காட்டியிருக்கிறோம். இன்றைய தமிழில் சந்தி விதிகள் குறித்து ஒரு மறு ஆய்வு தேவைப்படுகிறது. மரபு இலக்கணங்கள் கூறும் சந்தி விதிகளில் சில இன்றும் பின்பற்றப்படுகின்றன; வேறுசில விதிகள் பொது நிலையில் பின்பற்றப்படாமல் தமிழைச் சிறப்பாகப் படித்தவர்களின் மரபு இலக்கணப் பயிற்சியின் அடையாளமாகவே பயன்படுத்தப்படுகின்றன; சில பழைய விதிகள் முற்றிலும் விலக்கப்பட்டிருப்பதையும் காணலாம். பிறமொழிச் சொற்களின் வருகை பெருமளவில் இருப்பதாலும் ஒலிப்பு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களாலும் பழைய சந்தி விதிகளைப் பயன்படுத்துவதில் ஒருமித்த நிலை இல்லை. மேலும், புதியபுதிய சொற்சேர்க்கைகளைப் பயன்படுத்தும்போது சந்தி விதிகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் தீர்ப்பது எளிதல்ல. இந்தக் கையேட்டில் சந்தி விதிகளைத் தொகுத்துக் கூறும் பகுதியில் மேற்கூறிய சிக்கல்கள் சிலவற்றிற்குத் தீர்வு கூறியிருக்கிறோம்; சிலவற்றில் நடைமுறைச் சிக்கல்களைக் காட்டியிருக்கிறோம்; சிலவற்றைக் குறித்துக் கேள்விகள் எழுப்பியிருக்கிறோம். இந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ள ஏனைய மூன்றும் - சொல் தேர்வும் பொருள் தெளிவும், எழுத்துப்பெயர்ப்பு, அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும் - இன்றைய தேவைகளை உணர்ந்து எழுதப்பட்டவை. இந்த மூன்றினுள் சொல் தேர்வும் பொருள் தெளிவும், எழுத்துப்பெயர்ப்பு ஆகிய இரண்டும் தமிழில் எழுதுவதற்கு வழிகாட்டியாக வெளிவந்துள்ள நூல்களில் பெரும்பாலும் இடம்பெறாதவையாகவே இருக்கின்றன. அடிக்குறிப்புகளையும் துணைநூற்பட்டியலையும் எவ்வாறு தரவேண்டும் என்பதை ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் முறையில் விளக்கிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன; ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகச் சிறப்புக் கட்டுரை எழுதுபவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதி எழுதப்பட்டிருக்கிறது. |