எவையெல்லாம் இடம்பெறலாம், அதன் உள்ளடக்கம் எவ்வாறு இருக்கலாம் என்பது அந்தந்த மொழியின் தன்மையைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆங்கில மொழி நடைக் கையேடுகளில் உள்ளவை எல்லாம் தமிழ் மொழிக்குத் தேவை இல்லை. ஆங்கில மொழிக் கையேடுகளில் ‘பெரிய எழுத்துக்கள்’ (capitals) பற்றிக் கூறப்படும். தமிழுக்கு இது தேவை இல்லை. இரு சொற்கள் சேரும்போது நிகழும் மாற்றங்களைக் கூறும் ‘சந்தி’ தமிழில் காணப்படுவது; ஆங்கிலத்தில் காணப்படாதது. சேர்த்து எழுத வேண்டிய சொற்கள் எவை, பிரித்து எழுத வேண்டிய சொற்கள் எவை என்பது எல்லா மொழிகளுக்கும் உள்ள பொதுவான சிக்கலாக இருந்தாலும் தீர்வுகள் ஒன்றுபோல் இருக்காது. தமிழ் நடைக் கையேட்டில் தரப்பட்டிருக்கும் ஆறு தலைப்புகள் மட்டுமல்லாமல் வேறு சிலவும் இடம்பெற்றிருக்கலாம். போதிய தகவல் திரட்ட முடியாததால் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து விடப்பட்டவை ஒன்றிரண்டு உண்டு. இலக்கங்களை எண்ணால் எழுதும் இடங்கள், எழுத்தால் எழுதும் இடங்கள் பற்றியும் ஆணாதிக்கத்தைக் காட்டாத முறையில் எழுதுவது பற்றியும் கூறாததற்கு இதுவே காரணம். பேச்சுத் தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதும்போது எப்படி எழுத வேண்டும் என்ற நெறிமுறை இன்று தேவையான ஒன்று. இதுபற்றியும் இந்த நூலில் சொல்லப்படவில்லை. தரவில் கவனிக்கத் தவறியதால் எடுத்துக்கொண்ட ஆறு தலைப்புகளில் விடுபட்டுப்போனவையும் இருக்கக்கூடும். கையேட்டில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் கூடுதல் தரவுகளின் அடிப்படையிலும் பயன்படுத்துவோர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையிலும் பல மடங்கில் விரிவடையக்கூடியவை. எனவே, இந்தச் சிறு நூல் எழுத்து நடை நெறிமுறைகளுக்கு ஒரு தொடக்கமே. புதிய பதிப்புகள் வரும்போது இதன் பரப்பு விரியும். இன்று கணினியிலும் மின்னஞ்சலிலும் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். இந்தத் துறைகளில் தமிழின் பயன்பாடு குறித்த செய்திகள் இனி வரும் பதிப்புகளில் இடம்பெறும். |