பக்கம் எண் :

6

1. நிறுத்தக்குறிகள்

 

பேசும்போது சில சொற்களுக்குப் பின் சிறு கால இடைவெளி விடுகிறோம்; வேறு சில
இடங்களில் சற்றே அதிகக் கால இடைவெளி தருகிறோம். மேலும், சொற்களையும்
தொடர்களையும் வேண்டிய இடங்களில் ஏற்றஇறக்கத்தோடு ஒலிக்கிறோம். கால இடைவெளி
தருதல், நிறுத்துதல், ஏற்றஇறக்கம் தருதல் போன்ற முறைகளால் செய்திப் பரிமாற்றத்தில்
குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கிறோம். எழுதும்போது பேச்சில் பயன்படுத்தும் மேற்கூறிய
முறைகளுக்கு ஈடாகச் சிறு கால இடைவெளிக்குக் கால்புள்ளி [ ,], சற்று அதிகக் கால
இடைவெளிக்கு முற்றுப்புள்ளி [ . ], ஏற்ற இறக்கங்களுக்கு உணர்ச்சிக்குறி [ ! ],
கேள்விக்குறி [ ?] போன்ற குறிகளைப் பயன்படுத்துகிறோம்.

     பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டும் இந்தக் குறிகள் தவிர
இன்னும் சில குறிகள் உரைநடைக்குத் தேவைப்படுகின்றன. இவை அனைத்தையும்
‘நிறுத்தக்குறிகள்’ என்று கூறுகிறோம். இந்த நிறுத்தக்குறிகளுள் சிலவோ பலவோ
கவிதையிலும் பயன்படலாம்; என்றாலும், கவிதையில் இவற்றின் பயன்பாடு குறித்து இந்தக்
கையேட்டில் எதுவும் கூறவில்லை.

பின்வரும் நிறுத்தக்குறிகள் தற்கால உரைநடையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 

1. கால்புள்ளி (,)
2. அரைப்புள்ளி (;)
3. முக்கால்புள்ளி (:)
4.. முற்றுப்புள்ளி (.)
5. புள்ளி (.)
6. முப்புள்ளி(...)
7. கேள்விக்குறி (?)
8. உணர்ச்சிக்குறி (!)
9. இரட்டை மேற்கோள்குறி (“ “)
10.ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)

11. தனி மேற்கோள்குறி ( ‘ )
12. மேற்படிக்குறி (“)
13. பிறை அடைப்பு ( )
14. சதுர அடைப்பு [ ]
15. இணைப்புக்கோடு (வு)
16. இணைப்புச் சிறுகோடு (-)
17. சாய்கோடு (/)
18. அடிக்கோடு (_)
19. உடுக்குறி (*)
 

 

மேலே குறிப்பிட்ட நிறுத்தக்குறிகள் ஒவ்வொன்றையும் பயன்படுத்தத் தேவையான
நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகளுடன் இங்கே தந்திருக்கிறோம். நிறுத்தக்குறிகளை
முரணாகவோ மிகையாகவோ பயன்படுத்துவதைத் தவிர்த்து முறையாகப் பயன்படுத்த இந்த
நெறிமுறைகள் உதவும்.