4. சொல் தேர்வும் பொருள் தெளிவும் | படைப்பிலக்கியங்களில் காணப்படுவது தனிநபரின் நடைப் பாங்கு, இங்கு நாம் காணப்போவது செய்திப் பரிமாற்றத்திற்கு உதவும், கருத்துக்கு முதன்மை அளிக்கும் பொதுவான உரைநடை பற்றியதாகும். இந்தப் பொதுவான உரைநடை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுவது கடினம். எவ்வாறு இருக்கும்போது கருத்துத் தடைபடுகிறது, பொருள் குழப்பம் உண்டாகிறது என்று எடுத்துக்காட்டுவது சற்று எளிது. இந்தத் தடைகளும் குழப்பமும் பொருளிலும் இலக்கணத்திலும் காணக்கிடக்கின்றன. பொருளில் கவனம் என்னும் பிரிவில் சொற்பொருளில் நேரும் குழப்பத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இலக்கணத்தில் கவனம் என்னும் பிரிவில் இலக்கணப் பிழைகள் எவ்வாறு கருத்தையும் நடையையும் பாதிக்கின்றன என்று காட்டியிருக்கிறோம். இங்கு காட்டப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள் வலிந்து உண்டாக்கப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், வானொலிச் செய்தி அறிக்கைகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பாட நூல்கள் முதலியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டவை. எடுத்துக்காட்டியிருப்பவற்றுள் பிழைகள் என்று காட்டக்கூடியவை சில; புதிய போக்குகளைக் காட்டக்கூடியவை சில; ஏற்றுக்கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்துபவை சில. எனவே, ஒவ்வொன்றிற்கும் ஏற்ப தீர்வுகள் வேறுபடும். எடுத்துக்காட்டுகளில் உள்ள நிறுத்தக்குறிகளும் சந்தி மாற்றங்களும் அச்சில் கண்டபடி கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கையேட்டில் கூறப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி அவை திருத்தப்படவில்லை. | 1.0 பொருளில் கவனம் | 1.1 சொல் தேர்வில் கவனிக்க வேண்டியவை | பொருளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொருள் உணர்ந்து சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும். மொழியில் வழங்கும் பெரும்பான்மையான சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கின்றன. இருந்தாலும், தகவல் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு எழுதப்படும் ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் ஒரு பொருளையே குறிப்பிடுகிறது; ஏனைய பொருள்கள் விலக்கப்பட்டுவிடுகின்றன. இந்த வசதி இருந்தும் பொருள் குழப்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணங்களைக் கண்டுகொள்ள வேண்டும். | | |
|
|