1.1.1 ஒரே மூலமானாலும் பொருள் வேறு |
ஒரு வினைச்சொல்லோடு சில விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் பெயர்ச்சொற்களைப் பெறலாம். |
| (1) காஷ்மீர், ஊட்டி என்று குளிர்வான இடத்திற்கு அழைத்துச்சென்றால் நல்லது. |
‘குளிர்’ என்ற வினையிலிருந்து ‘குளிர்வு’ என்றும் ‘குளிர்ச்சி’ என்றும் பெயர்கள் வருகின்றன. பெயர்களுள் சிலவே ‘ஆன’ என்னும் விகுதி இணைந்து பெயரடையாக வழங்கும், ‘குளிர்வான’ என்பது பெயரடையாக ‘இடம்’ என்பதற்கு வழங்கும் வழக்கு இல்லை. ‘குளிர்ச்சியான இடம்’ என்பது ‘இதமான குளுமை தரும் இடம்’ என்னும் பொருளைத் தருவதால் அதுவே இங்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. |
| (2) வாழ்வில் குறைவில்லாத மனிதன் எவனுமே இல்லை. |
‘குறை’, ‘குறைவு’ என்னும் இரு சொற்களும் வடிவ ஒப்புமையால் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவ்விரு சொற்களோடும் ‘இல்லாத’ என்பது இணையும் போது முறையே ‘குறையில்லாத’ என்றும் ‘குறைவில்லாத’ என்றும் வரும். ‘வாழ்வில் குறையில்லாத (= குறைகள்/தேவைகள் இல்லாத) மனிதன் ...’ என்று இருக்க வேண்டிய இடத்தில் ‘குறைவில்லாத’ (= கம்மி இல்லாத) என்பது பயன்படுத்தப்பட்டிருப்பது பொருத்தமற்றது. |
1.1.2 ஒரு பொருள் தரும் பல சொற்கள் |
ஒரே பொருளைத் தரும் இரு சொற்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. ஒன்று வரும் இடத்தில் மற்றொன்றைப் பயன்படுத்துவது சில இடங்களில் பொருத்தமாக இருக்கலாம். வேறுசில இடங்களில் பொருத்தம் இல்லாமல்போகலாம். |
| (3) கவிதா - கொஞ்ச வாரத்துக்கு முன்னால ஒரு வாரப் பத்திரிகையில சிறுகதை எழுதியிருந்தா |
‘கொஞ்சம்’ என்பதும் ‘சில’ என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்களே. பேச்சு வழக்கில் ‘நாள்’ என்பதற்கு முன் ‘கொஞ்ச(ம்)’ என்பதும் எழுத்து வழக்கில் ‘சில’ என்பதும் பயன்படுத்தப்படுகின்றன (எ-டு ‘கொஞ்ச/சில நாள் போகட்டும்?’). இருந்தாலும், ‘கொஞ்சம்’ என்பது வாரம், மாதம், முதலியவற்றின் முன் பயன்படுத்தப்படுவதில்லை. |