பக்கம் எண் :

105

மானவை. இந்தப் பொருள் சாயலை அல்லது தொனிப்பொருளைப் புறக்கணித்து விட
முடியாது.
(7) நம் பெரியவர்கள், பகவானைவிட ஆச்சாரியனுக்குத்தான்,
அதாவது பகவானைக் காட்டிக்கொடுக்கும் குருவுக்குத்தான்
அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்.
 
     இந்த வாக்கியத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் ‘காட்டிக்கொடு’ என்னும் வினைச்சொல்
‘நம்பிக்கைத்துரோகம் செய்தல்’ என்னும் பொருள் சாயலோடு வழங்குவதாகும். குருவானவர்
பகவானைக் காட்டிக்கொடுக்கிறார்’ என்று கூறியிருப்பது ‘காட்டிக்கொடு’ என்பதற்கு
மேற்கூறிய தொனிப்பொருள் இருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கிறது.
‘பகவானைக் காட்டக்கூடிய குருவுக்கு’ என்னும் அளவிலாவது இதை மாற்றி அமைக்கலாம்.

     வேறுசில தொடர்களுக்கு உயர்வான அல்லது நயமான தொனிப்பொருள் உண்டு.
அவற்றை அவற்றிற்கே உரிய உயரிய சூழ்நிலைக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர
இரங்கத் தக்க சூழலுக்குப் பயன்படுத்தக் கூடாது.
  (8) இந்தத் தொல்லைகளில் நான் மனத்தைப் பறிகொடுத்திருக்கும்போது
உன் இம்சையும் சேர்ந்துகொண்டுவிடுகிறது.
 
     மகிழ்ச்சியை அல்லது அழகுணர்ச்சியைத் தோற்றுவிக்கக்கூடியதில் மனதைப்
பறிகொடுப்பது ஏற்புடைய வழக்கு. தொல்லைகளில் மனதைப் பறிகொடுப்பதாகக்
கூறியிருப்பது பொருள் நுட்பம் அறிந்த சொல்லாட்சியாக இல்லை.
‘வருத்திக்கொண்டிருக்கும்போது’ ‘உழப்பிக்கொண்டிருக்கும்போது’ போன்றவை பொருத்தமாக
இருக்கலாம்.
  (9) சோமாலி நாட்டினர் கடும் வெப்பம், பசி, தாகம்
ஆகியவற்றினால் உயிர்துறந்துகொண்டுள்ளனர்.
 

     ‘உயிர்துறத்தல்’ என்பது தியாக உணர்வை வெளிப்படுத்தும் தொடர். தியாக
உணர்வை உள்ளடக்கியிருக்கும் இந்தத் தொடரைப் பசி, தாகம் முதலியவற்றால் மரணம்
அடைபவர்களுக்கு ஏற்றியிருப்பது பொருந்தாது. ‘உயிர்விட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்பது
சற்றுப் பொருத்தமானது; ‘உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று மாற்றுவதும்
பொருத்தமானதே.