பக்கம் எண் :

107

     ‘பெருமை பிடிபடாமல்’, ‘பெருமை பிடிபடவில்லை’ போன்று எதிர்மறை வடிவங்களில்
பழக்கமானவற்றை ‘பெருமை பிடிபட’ என உடன்பாட்டு வடிவில் வழங்குவது பொருத்தமாக
இல்லை. இந்த இடத்தில் ‘பெருமைபட’ அல்லது ‘பெருமிதமாக’ என்ற சொல்லாட்சிகள்
பொருத்தமாக இருக்கும்.
 
    1.1.5 பெயர்ச்சொல்லை வினையாக்கும் வினைகள்
 
     செய், பண்ணு, ஆகு போன்ற வினையாக்கும் வினைகள் பெயர்ச்சொல்லுடன் சேரும்
போது பெயர்ச்சொல் வினைத்தன்மை பெறுகிறது. எல்லாப் பெயர்ச்சொல்லும் எல்லா
வினையாக்கும் வினையையும் ஏற்பதில்லை.
 
(14) மாவட்டத் தலைநகர்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக... ஆர்ப்பாட்டம்செய்வது என முடிவாற்றியது.
 
  
     ‘ஆர்ப்பாட்டம்’ என்ற பெயருடன் ‘செய்’ என்னும் வினையாக்க வினை இயல்பாக
இணைந்திருக்கிறது. ஆனால், ‘முடிவு’ என்னும் பெயருடன் ‘ஆற்று’ என்னும் வினையை
இணைப்பது பொருத்தம் இல்லை. இங்கு ‘முடிவுசெய்யப்பட்டது’ என்பது பொருத்தமாக
இருக்கும்; ‘முடிவாயிற்று’ என்பதும் பொருத்தமாக இருக்கும்.
 
  (15) ...ஃபரூக் அப்துல்லாவின் பொறுப்பு மட்டுமே என்பதுபோல மத்திய ஆட்சியாளர்கள் வேஷம் புரிய முனைகிறார்களே அந்தப் போலித்தனம்...
    
      ‘வேஷம்’ என்ற பெயர்ச்சொல்லோடு ‘போடு’ என்ற வினை சேர்ந்த ‘வேஷம் போட’
என்னும் வினைத்தொடரே ஏற்றுக்கொள்ளக்கூடியது; ‘புரி’ என்பது இங்கு பொருத்தமற்றது.
 
  (16) குண்டு வீச்சினால்... பெண் ஊழியர் ஒருவர்
இலேசான காயங்களடைந்தார்.
 

  ‘இலேசான’ என்பது பெயரடை. இது ‘காயங்கள்’ என்னும் பெயருக்கு அடையாக
வருகிறது. இவ்வாறு வருவதால் ‘அடைந்தார்’ என்ற வினையைப் பிரித்தே எழுத வேண்டும்.
‘கள்’ விகுதியை நீக்கிவிட்டு ‘காயமடை’ என்பதை ஒரு வினையாகக் கொள்வது, இதற்கு
மற்றொரு தீர்வு. இந்த வினைக்கு வினையடையாக ‘இலேசாக’ என்பதைப் பயன்படுத்த
வேண்டும். எனவே, ‘இலேசாகக் காயமடைந்தார்’ என மாற்றுவது ஏற்புடையதாகும்.