பக்கம் எண் :

108

1.1.6 மரபுத்தொடரில் மாற்ற முடியாத சொற்கள்
 
     மொழியில் வழங்கும் மரபுத்தொடர்களின் சொற்களை அவை வழங்கிவரும்
முறையிலேயே பயன்படுத்த வேண்டும். மரபுத்தொடர்களில் உள்ள சொற்கள் பெரும்பாலும்
மாற்ற முடியாதவை. சில மரபுத்தொடர்களில் சொல் மாற்றம் அனுமதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்று’ என்னும் மரபுத்தொடரில் ‘ஊற்று’
என்பதற்கு மாற்றாக ‘விடு’, ‘வார்’ என்பன அனுமதிக்கப்படுகின்றன. சொல் மாற்றம்
அனுமதிக்கப்படாத மரபுத்தொடர்களில் சொற்சேர்க்கையை மாற்றக்கூடாது.
 
(17) மகளுடன் கூடவே படப்பிடிப்புக்கு வந்து தயாரிப்பாளர்களின் பிராணனைப் பிய்க்கும் நட்சத்திரத் தாய்மார்கள்
 
     பிராணனை வாங்கு/எடு’ என்னும் மரபுத்தொடரில் உள்ள ‘வாங்கு/எடு’ என்பதற்குப்
பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ’பிய்’ என்பது அனுமதிக்கப்பட்ட மாற்றம் அல்ல.
‘மிகவும் துன்புறுத்துகிறார்கள்’ என்று வலியுறுத்திச் சொல்வதற்காக மரபுத்தொடரில் ‘பிய்’
சேர்க்கலாம் என்பதும் பொருந்தாது. ஏனென்றால், ‘பிராணனை வாங்கு/எடு’ என்பதே
அழுத்தமும் வன்மையும் உடைய தொடர்தான்.
  (18) சேகர் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பிடிக்க இ.காங். முயலுகிறது.
 
      'பிடி’ என்ற வினையும் ‘பற்று’ என்ற வினையும் ஒரே பொருளில் வழங்குவதுண்டு.
‘என் கையைப் பிடித்து/பற்றி’ என்பதில் பொருள் வேறுபாடு இல்லை. ஆனால், ‘கைப்பிடி’
என்பது ‘திருமணம்செய்துகொள்ளுதல்’ என்னும் பொருள் உடையது. எனவே, மேற்காட்டிய
வாக்கியத்தில் ‘ஆட்சியைக் கைப்பிடிக்க’ என்பது பொருந்தவில்லை. ‘கைப்பற்ற’ என்பதே
பொருத்தமான வழக்கு.    
 
     சில நேரங்களில் மரபுத்தொடர் என்று நினைத்துப் பயன்படுத்தும் தொடர் இரு வேறு
தொடர்களின் ஒட்டாக அமைந்துவிடுவது உண்டு.
 
  (19) ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆதரவுக்குப் பஞ்சம் இல்லை என்று பாஜக தோள் தட்டியது...
 
     இந்த வாக்கியத்தில் உள்ள ‘தோள் தட்டு’ என்பது ‘தோள் கொட்டு’ என்ற தொடரில்
உள்ள முதல் சொல்லையும் ‘மார் தட்டு’ என்ற தொடரில் உள்ள இரண்டாவது
சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பெருமைப்பட்டுக்கொள்ளுதல்’