பக்கம் எண் :

115

     இந்த வாக்கியத்தில் ‘இதையெல்லாம்’ என்றோ ‘இவை எல்லாவற்றையும்’ என்றோ
‘இவற்றையெல்லாம்’ என்றோ இருப்பது பொருத்தமானது.
 
2.2 இலக்கணப் பொருத்தக் குறைபாடுகள்
 
2.2.1 எழுவாய், பயனிலை
 
     ஒரு வாக்கியத்தில் எழுவாய்க்கு ஏற்ற பயனிலை இருக்க வேண்டும் என்பது விதி. சில
இடங்களில் இதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
 
  (38) உணவு வாங்குவதற்காக எப்போதுமே ரஷியாவில் காணப்படும் கியூ இப்போது மேலும் நீளமாகிவிட்டன.
 
     வாக்கியத்தில் ‘கியூ’ என்பது ஒரே ஒரு வரிசையைக் குறித்தால் ‘நீளமாகிவிட்டன’
எனப் பன்மை முடிவு கொண்டிருக்கக் கூடாது. ஒருவேளை ‘கியூக்கள்’ என்று ஆங்கிலச்
சொல்லுக்குப் பன்மை விகுதி தருவதை விரும்பாததால் இவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம்.
 
(39) சுதந்திரதின விழா சென்னையில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டன.
 
     ‘விழா’ என்ற எழுவாய் ஒருமைக்கு ஏற்ற வினை முடிபு ‘கொண்டாடப்பட்டது’
என்பதுதான்.
 
(40) என்மீது அவளே விவாகரத்து வழக்கு தொடர்ந்து 16.11.2000இல்
விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டோம்.

     இந்த வாக்கியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது ‘அவள்’; எனவே அதற்கு ஏற்ப
‘அவளே ... வழக்கு தொடர்ந்து ... பெற்றாள்’ என்று இருந்திருக்க வேண்டும். அல்லது
‘நாங்கள் பிரிந்துவிட்டோம்’ என்று ‘நாங்கள்’ என்னும் எழுவாயை வெளிப்படையாகக்
கூறியிருக்க வேண்டும்.
 
2.2.2 ஒருமை, பன்மை

     எழுவாய்க்கு ஏற்ற பயனிலை இருக்க வேண்டும் என்ற விதியிலிருந்து விலகிச் சென்ற
வாக்கியங்கள் போலவே ஒருமை, பன்மைப் பொருத்தத்திலிருந்து விலகிய வாக்கியங்களும்
உண்டு.