| (41) என்ன ஒரு ஜந்துக்கள் |
|
இங்கு ‘ஒரு’ என்பது ‘ஜந்துக்கள்’ என்ற பன்மையோடு பொருந்தவில்லை. |
| (42) பாகிஸ்தானில் தொடர்ந்து நான்காவது நாட்களாக நடந்த கிளர்ச்சியில் ... |
‘நான்கு நாட்களாக’ என்பது முதல் நாள் தொடங்கி நான்காம் நாள் முடிய உள்ள நாட்களைக் குறிப்பிடும். ‘நான்காவது நாள்’ என்பது முதல் மூன்று நாட்களை விட்டு விட்டு ‘நான்காவது’ நாளை மட்டும் சுட்டும். மேலே காட்டிய வாக்கியத்தில் ‘தொடர்ந்து நான்காவது நாட்களாக’ என்பது இருவேறு முறைகளில் கூறப்படுவதை ஒன்றாக்கியதால் ஏற்பட்ட பிழை. ‘நான்காவது’ என்பதன் பின்னர் ‘நாட்கள்’ எனப் பன்மையில் கூறுவது ஏற்புடையதில்லை. வாக்கியத்தில் ‘தொடர்ந்து’ என்பது பயன்படுத்தப் பட்டிருப்பதால் ‘நான்கு நாட்களாக’ என்பதே பொருத்தமானது. |
2.2.3 மாற்றுப்பெயர்ச்சொற்கள் |
| |
பெயர்ச்சொற்களுக்கு மாற்றாக வரும் நான் - என், நாம் - நம், நாங்கள் - எங்கள், நீ - உன், நீர் - உம், நீங்கள் - உங்கள் முதலியவை மாற்றுப்பெயர்ச்சொற்கள். இவற்றின் பொருத்தம் அறிந்து வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும். |
| (43) உம் உள்ளங்காலில் ஒரு மையைத் தடவுகிறேன். அடுத்த கணமே நீங்கள் இமயமலையில் இருப்பீர். |
இரண்டாவது வாக்கியத்தில் ‘நீங்கள்’ என்னும் முன்னிலைப் பன்மை வந்திருப்பதால் முதல் வாக்கியத்தில் ‘உங்கள்’ என்றே இருக்க வேண்டும். அல்லது ‘உம்’ என்பதை ஏற்றுக்கொண்டால் இரண்டாவது வாக்கியத்தில் ‘நீர்’ என்று இருப்பதே பொருத்தம். நீங்கள் - உங்கள், நீர் - உம் என்பதே பொருத்தமான மாற்றுப்பெயர் வடிவங்கள். |
|
2.2.4 இரு வினைகளுக்கு ஏற்ப மாற வேண்டிய வேற்றுமை |
ஒரு நீண்ட வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வினைகள் ஒரு நபரை நோக்கியவையாக இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது வினைக்குத் தகுந்தபடி வேற்றுமை உருபு மாற வேண்டும். சில இடங்களில் வேற்றுமையை மாற்றாமல் மறந்து விட்டுவிடுவதும் உண்டு. |
| (44) இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு மாணவனுக்கு இத்தகைய ஆதாரங்கள் - ஒன்று குழப்பம் தரும்; அல்லது இன்னமும் தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும். |